பாலக்கோடு அருகே புளியமரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி திருமணம் நிச்சயிக்கப்பட்ட தொழிலாளி பலி

Update: 2023-07-04 19:30 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் பலியானார். உறவுக்கார சிறுவன் படுகாயம் அடைந்தான்.

தச்சு தொழிலாளி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மைதீன்நகரை சேர்ந்த நசீர் மகன் நதிம்முல்லா (வயது 24). இவர், தச்சு தொழிலாளி. இவருக்கு திருமணம் நிச்சயமாகி இன்னும் 2 நாட்களில் திருமணம் நடைப்பெற இருந்தது. புது மோட்டார் சைக்கிள் வாங்கிய நதிம்முல்லா, அதே பகுதியை சேர்ந்த உறவினரான முகம்மதுகான் என்பவரின் மகன் மோசின் (வயது 14) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெள்ளிசந்தையில் இருந்து காரிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கருக்கணஅள்ளி வேகத்தடை அருகே வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலை ஓரம் இருந்த புளியமரத்தின் மீது மோதியது.

பலி

இதில் தூக்கி வீசப்பட்ட நதிம்முல்லா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வந்த மோசின் படுகாயமடைந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். மோசினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணம் நடைபெற இருந்த நிலையில் வாலிபர் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்