ஆட்டோ மோதி வியாபாரி பலி
அருமனையில் ஆட்டோ மோதி வியாபாரி பலியானார். இதுதொடர்பாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
அருமனை:
அருமனையில் ஆட்டோ மோதி வியாபாரி பலியானார். இதுதொடர்பாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
வியாபாரி
அருமனை அருகே உள்ள பனங்கரை பகுதியை சேர்ந்தவர் குமரேசன்(வயது 70). இவருக்கு மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். குமரேசன் அந்த பகுதியில் நோட்டு, புத்தக கடை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கடையில் இருந்து வீட்டுக்கு குமரேசன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
ஆட்டோ மோதியது
அப்போது அருமனையில் இருந்து சிதறால் நோக்கி சென்றுகொண்டிருந்த ஒரு ஆட்டோ திடீரென குமரேசன் மீது மோதி விட்டு கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட குமரேசன் சாலையோரத்தில் இருந்த மழைநீர் ஓடையில் விழுந்தார். ஆனால் இதை யாரும் கவனிக்கவில்லை.
இதையடுத்து அந்த பகுதி மக்கள் ஓடி வந்து சாலையில் கவிழ்ந்து கிடந்த ஆட்டோவை தூக்கி விட்டனர். மேலும், ேலசான காயமடைந்த டிரைவரையும் மீட்டு அனுப்பி வைத்தனர்.
2 மணிநேரத்துக்கு பிறகு...
இந்தநிலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு அந்த வழியாக சென்றவர்கள் மழைநீர் ஓடையில் இருந்து வந்த சத்தம் கேட்டு அருகில் சென்று பார்த்தனர். அப்போது, குமரேசன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமரேசன் பரிதாபமாக இறந்தார்.
டிரைவர் கைது
இதுகுறித்த புகாரின் பேரில் அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவரான அருமனை குஞ்சாலுவிளையை சேர்ந்த தேவராஜை கைது செய்தனர்.