'ஆப்பிரிக்காவில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தர வேண்டும்'

ஆப்பிரிக்காவில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி, கைக்குழந்தையுடன் கண்ணீர் மல்க திண்டுக்கல் கலெக்டரிடம் பெண் ஒருவர் மனு கொடுத்தார்.

Update: 2023-05-27 15:33 GMT

ஆப்பிரிக்காவில் வேலை

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா எழுவனம்பட்டியை சேர்ந்தவர் நல்லு. அவருடைய மகன் முத்துப்பாண்டி (வயது 38). இவர், மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள போர்வெல் நிறுவனத்தில் போர்வெல் டிரைவராக வேலை பார்த்தார். அவருடைய மனைவி ஜெயலட்சுமி (25). இவர்களுக்கு கனிமொழி (8) என்ற மகளும், சபரீஷ்பாண்டி (5) என்ற மகனும், பிறந்து 15 நாட்களே ஆன ஆண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் ஜெயலட்சுமி தனது கைக்குழந்தை, மகன், மகள் மற்றும் உறவினர்களுடன் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார். பின்னர் கலெக்டர் பூங்கொடியிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.

உடலை மீட்டுத்தர வேண்டும்

அந்த மனுவில், எனது கணவர் ஆந்திராவில் உள்ள தனியார் ஏஜென்சி மூலம் மேற்கு ஆப்பிரிக்காவுக்கு போர்வெல் டிரைவராக வேலைக்கு சென்றார். அவ்வப்போது எங்களுடன் வீடியோ கால் மூலம் பேசுவார்.

அதன்படி கடந்த 25-ந்தேதி காலை 11 மணி அளவில் எனது கணவர் வீடியோ கால் மூலம் எங்களிடம் பேசினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆந்திராவில் உள்ள தனியார் ஏஜென்சி ஊழியர்கள் என்னை செல்போனில் தொடர்புகொண்டனர்.

அப்போது எனது கணவர் வேலை செய்யும் இடத்தில் இறந்து விட்டதாக கூறினர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நான், கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்னிடம் பேசியவரிடம் தொடர்பு கொண்டு எனது கணவர் எப்படி இறந்தார் என கேட்டதற்கு பதில் கூறாமல் செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார்.

எனவே எனது கணவர் எப்படி இறந்தார் என்று தெரிய வேண்டும். மேலும் அவருடைய உடலை மீட்டு எழுவனம்பட்டிக்கு கொண்டுவர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த மனுவை பெற்ற கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி கைக்குழந்தையுடன் வந்து கண்ணீர் மல்க கலெக்டரிடம் பெண் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

----------------

Tags:    

மேலும் செய்திகள்