வேதாமிர்த ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2023-07-02 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்தால்...

வேதாரண்யம் -நாகை சாலையில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் வேதாமிர்த ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் அன்றாட தேவைக்கு பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஏரியில் வேதாரண்யம் கோவிலில் நடைபெறும் முக்கிய தீர்த்தவாரி நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம்.

தற்சமயம் இந்த ஏரியை சுற்றி தடுப்பு சுவர் அமைத்து, நடைபாதையும் அமைத்து ஏரியின் நடுவே நந்தி மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் நந்தி மண்டப வேலைகள் முடித்து குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் விட்டு விட்டு மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

செத்து மிதக்கும் மீன்கள்

இந்த ஏரியின் மீன்பாசி குத்தகையை கோவில் நிர்வாகம் பொது ஏலம் விட்டு தொகை பெற்று வருகிறார்கள். தற்போது வெயிலின் தாக்கத்தால் தண்ணீரின் சூடு அதிகமாக உள்ளது. இதனால் தினசரி இந்த ஏரியில் உள்ள கெண்டை மீன்கள் செத்து மிதந்தன. மேலும் செத்த இந்த மீன்கள் காற்றினால் வடக்கு புறம் ஒதுங்குகிறது.

பருந்து, நாய்கள் எடுத்து சென்றது போக மீதமுள்ள செத்த மீன்கள் அங்கே ஒதுங்கி உள்ளன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்