கூடுவாஞ்சேரி பெரிய ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு
கூடுவாஞ்சேரி பெரிய ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு ஏரியில் கழிவுநீர் கலக்காமல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
கூடுவாஞ்சேரி,
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் எதிரே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கூடுவாஞ்சேரி பெரிய ஏரி உள்ளது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கும்.
இந்த நிலையில் நேற்று ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏரியில் மீன்கள் செத்து கிடப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் வேதனை அடைந்தனர். இதன் காரணமாக ஏரியை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
கூடுவாஞ்சேரி பெரிய ஏரியில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அந்த தண்ணீரை அப்பகுதி மக்கள் பயன்படுத்த முடியாது. ஏனென்றால் ஏரியில் உள்ள தண்ணீரில் பல்வேறு பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் கலந்துவிட்டதால் கூடுவாஞ்சேரி ஏரியில் உள்ள தண்ணீரை பொதுமக்களும், கால்நடைகளும், விவசாயத்துக்கும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகிவிட்டது. எனவே கூடுவாஞ்சேரி ஏரியில் கழிவுநீர் கலக்காமல் தடுத்து ஏரியில் உள்ள மீன்களை பாதுகாக்க செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.