பெருந்துறை அருகே ஆட்டு இறைச்சி சாப்பிட்ட புதுமாப்பிள்ளை சாவு; திருமணமான 2 நாளில் சோகம்
ெபருந்துறை அருகே திருமணமான 2 நாளில் ஆட்டு இறைச்சி சாப்பிட்ட புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.
பெருந்துறை
ெபருந்துறை அருகே திருமணமான 2 நாளில் ஆட்டு இறைச்சி சாப்பிட்ட புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுமாப்பிள்ளை
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காஞ்சிக்கோவில் கண்ணவேலம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி சாமியாத்தாள். இவர்களுடைய மகன் தங்கமுத்து என்கிற பிரகாஷ் (வயது 36). கூலித்தொழிலாளி.
பவானி அருகே உள்ள மூலக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வி என்கிற ஜானகி (30). இவருக்கும், பிரகாசுக்கும் கடந்த 23-ந் தேதி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்தது.
ஆட்டு இறைச்சி சாப்பிட்டார்
இந்த நிலையில் பிரகாஷ் விருந்துக்காக மனைவி ஜானகியுடன் மூலக்கவுண்டன்பாளையத்தில் உள்ள மாமனார் வீட்டு்க்கு 24-ந் தேதி சென்றுள்ளார். அப்போது அங்கு பிரகாஷ் ஆட்டு இறைச்சி சாப்பிட்டுள்ளார். அதன்பின்னர் அவரும், ஜானகியும் கண்ணவேலம்பாளையம் திரும்பி வந்துவிட்டனர்.
பின்னர் இரவு பிரகாஷ் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது ஒவ்வாமையினால் அவருக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தாங்க முடியாமல் பிரகாஷ் அலறி துடித்துள்ளார்.
சாவு
அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த உறவினர்கள் உடனே பிரகாசை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பிரகாசின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ஆட்டு இறைச்சி சாப்பிட்டதால் அலர்ஜி ஏற்பட்டு பிரகாஷ் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறினர்.
திருமணம் ஆன 2 நாட்களில் புதுமாப்பிள்ளை ஆட்டுஇறைச்சி சாப்பிட்டு இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.