இண்டூர் அருகே சரக்கு வேன் மோதி 17 வயது சிறுவன் பலி

Update: 2023-02-24 18:45 GMT

பாப்பாரப்பட்டி:

இண்டூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதியதில் 17 வயது சிறுவன் பலியானான்.

17 வயது சிறுவன்

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள கழனிகாட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மகன் மாரிமுத்து (வயது 17). இந்த சிறுவன் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, பெங்களூருவில் மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தான்.

மாரிமுத்து நேற்று கழனிகாட்டூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் இண்டூருக்கு சென்றான். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தான். வழியில் இண்டூர் அருகே உள்ள பாறைக்கொட்டாய் என்ற இடத்தில் எதிரே சரக்கு வேன் ஒன்று வந்தது.

வேன் மோதி பலி

திடீரென அந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மாரிமுத்து படுகாயம் அடைந்தான். அவனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டான்.

அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் மாரிமுத்து ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த இண்டூர் போலீசார் மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்