உத்தனப்பள்ளி அருகே லாரியில் இருந்து இறக்கியபோது இரும்பு குழாய்கள் விழுந்து தொழிலாளி சாவு

Update: 2022-11-10 18:45 GMT

ராயக்கோட்டை:

உத்தனப்பள்ளி அருகே லாரியில் இருந்து இறக்கியபோது இரும்பு குழாய்கள் தலையில் விழுந்து தொழிலாளி பலியானார்.

தொழிலாளி

ராயக்கோட்டையை அடுத்த உத்தனப்பள்ளி அருகே தியாகரசனபள்ளியில் இரும்பு குழாய்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு தயார் செய்யப்படும் இரும்பு குழாய்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, உள்ளட்டி என்ற பகுதியில் உள்ள குடோனில் வைக்கப்படும்.

நேற்று வழக்கம் போல் லாரி ஒன்றில் இரும்பு குழாய்கள் உள்ளட்டியில் உள்ள குடோனுக்கு கொண்டு வரப்பட்டன. அந்த குழாய்களை லாரியில் இருந்து குடோனில் இறக்கி வைக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது தர்மபுரி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த சதானந்தன் (வயது 41) என்ற தொழிலாளி இரும்பு குழாய்களை இறக்க லாரி மீது ஏறினார்.

இரும்பு குழாய் விழுந்தது

அவர் லாரி மீது நின்றவாறு, இரும்பு குழாய்கள் மீது போர்த்தப்பட்ட தார்ப்பாயை அவிழ்த்தார். அப்போது திடீரென இரும்பு குழாய்கள் லாரியில் இருந்து சரிந்தன. அவற்றுடன் சேர்ந்து தொழிலாளி சதானந்தனும் கீழே விழுந்தார். அப்போது இரும்பு குழாய்கள் அவர் தலை மீது விழுந்து அழுத்தியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், குழாய்களை அகற்றி சதானந்தனை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதானந்தன் பரிதாபமாக இறந்தார்.

சோகம்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் சதானந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உத்தனப்பள்ளி அருகே இரும்பு குழாய்கள் விழுந்ததில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்