தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டையில் 17 வயது சிறுமி மர்மமாக இறந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
17 வயது சிறுமி
கர்நாடக மாநிலம் ஆனேக்கல்லை அடுத்துள்ள தாசனபுரா கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ். இவருக்கு ஆஞ்சம்மா, சவிதா (வயது 17) என்ற 2 மகள்கள் இருந்தனர். ஆஞ்சம்மா திருமணமாகி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் கணவருடன் வசித்து வருகிறார். சவிதா ஆனேக்கல்லில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக சவிதாவுக்கு தீராத தலைவலி ஏற்பட்டது. இதனால் அவர் அத்திப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் அவருக்கு குணமாகவில்லை.
மர்ம சாவு
இதையடுத்து பசவராஜ், சிறுமி சவிதாவை தேன்கனிக்கோட்டையில் உள்ள ஆஞ்சம்மா வீட்டுக்கு அழைத்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். திடீரென சிறுமி சவிதா மூச்சு, பேச்சு இல்லாமல் கிடந்தார். இதனால் அவரை குடும்பத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தலை வலியால் அவதிப்பட்டு வந்த 17 வயது சிறுமி மர்மமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.