ஓசூர் அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 9-ம் வகுப்பு மாணவன் பரிதாப சாவு
ஓசூர்:
ஓசூர் அருகே உள்ள நந்திமங்கலத்தை அடுத்த சித்தனப்பள்ளியை சேர்ந்தவர் சிவா (வயது 15). இவன் ஓசூர் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை சிவா, வாலிபர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தான். வழியில் முகுலபள்ளி கேட் அருகே சாலையோரம் நின்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சிவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். வாலிபர் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிவாவின் உடல் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவனின் உடலை அடக்கம் செய்ய சித்தனபள்ளிக்கு எடுத்து சென்றனர். அங்கு இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடம் மழைநீரால் மூழ்கி இருந்தது. இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செய்வதறியாது திகைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் தாசில்தார் கவாஸ்கர் அங்கு சென்று, சிவாவின் உடலை அடக்கம் செய்ய வேறு இடம் ஒதுக்கி கொடுத்தார். இதையடுத்து அங்கு அவனது உடல் அடக்கம் செய்யப்பட்டது.