நண்பனின் பிறந்த நாள் விழாவுக்கு சென்று திரும்பியபோது விபத்து: கழிவுநீர் கால்வாயில் விழுந்து கட்டிட மேஸ்திரி பலி-நண்பர் படுகாயம்
மாரண்டஅள்ளி:
நண்பனின் பிறந்த நாள் விழாவுக்கு சென்று திரும்பியபோது, கழிவுநீர் கால்வாயில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து கட்டிட மேஸ்திரி பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
கட்டிட மேஸ்திரி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பனங்காடு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் கார்த்தி (வயது 22). கட்டிட மேஸ்திரி. அதே பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளியான விஷால். கார்த்தி, விஷால் ஆகிய 2 பேரும் நண்பர்கள் ஆவர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரும் நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள சென்றனர். பின்னர் இரவில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பாலக்கோடுக்கு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கார்த்தி ஓட்டினார்.
கழிவுநீர் கால்வாயில் விழுந்து பலி
வழியில் மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே கோட்டை முனியப்பன் கோவில் முன்பு சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. இதனால் சாலையோரம் இருந்த கழிவுநீர் கால்வாயில் பாய்ந்தது. இந்த விபத்தில் கழிவுநீர் கால்வாயில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த கார்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். விஷால் படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மாரண்டஅள்ளி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் படுகாயம் அடைந்த விஷாலை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணை
சம்பவ இடத்தில் பலியான கார்த்தி உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நண்பனின் பிறந்த நாள் விழாவுக்கு சென்று திரும்பியபோது, கழிவுநீர் கால்வாயில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.