கட்டிட இடிபாடுகளுடன் காட்சியளிக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதியை சீரமைக்க கோரிக்கை

கட்டிட இடிபாடுகளுடன் காட்சியளிக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதியை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-28 19:04 GMT

செந்துறை:

ஆக்கிரமிப்புகள்

அரியலூர் மாவட்டம், செந்துறையில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியின் கரை மற்றும் வரத்து வாய்க்கால்கள் கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. அவற்றை அகற்ற பொதுப்பணித்துறையினர் பல ஆண்டுகளாக முயன்று வந்தனர். இதற்காக அங்கு வசித்தவர்களுக்கு பல ஆண்டுகளாக அவகாசம் கொடுத்தனர்.

இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து செந்துறை தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை ஏரி மற்றும் வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த ஆண்டு மார்ச் மாதம் கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்.

கோரிக்கை

அதன்படி அப்போதைய செந்துறை தாசில்தார் குமரய்யா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் இப்பகுதி கட்டிட இடிபாடுகளுடன் குட்டிச்சுவர்களுடன் காட்சி அளிக்கிறது. எனவே இந்த பகுதியை சீரமைத்து, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பூங்கா மற்றும் வாரச்சந்தை அமைக்க வேண்டும் என்று செந்துறை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றிய அவர்களது கருத்துகள் வருமாறு:-

போக்குவரத்து நெரிசல்

கூலி தொழிலாளி தேவேந்திரன்:- தற்போது செந்துறை பஸ் நிலையத்தில் தற்காலிகமாக சந்தை இயங்கி வருகிறது. இதனால் அந்த பகுதி கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. எனவே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இந்த இடத்தை சீரமைத்து வாரச்சந்தை அமைக்க வேண்டும். இதனால் செந்துறை பகுதி மக்கள் பயனடைவதோடு, ஊராட்சிக்கும் வருவாய் கிடைக்கும். பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்க முடியும்.

பயன்படாமல் உள்ளது

விவசாயி தேவா:- 10 ஏழை குடும்பங்கள் வசித்து வந்த பகுதியை நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி அதிகாரிகள் இடித்துவிட்டு சென்று விட்டனர். இதனால் அந்த இடம் தற்போது குட்டிச் சுவர்களாக பாழடைந்து, யாருக்கும் பயன்படாமல் உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இங்கு வாரச்சந்தை அமைத்து விளை பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்படும்போது விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரும் பயன்பெறுவார்கள்.

பூங்கா அமைக்க வேண்டும்

டிரைவர் ராஜா:- அதிகாரிகள் வந்து, 40 வருடங்களாக வசித்து வந்த இந்த பகுதி மக்களை அப்புறப்படுத்தி விட்டு, குடியிருப்பு போன்றவற்றை இடித்து விட்டார்கள். ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆர்வம் காட்டிய அதிகாரிகள், இந்த இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராதது வேதனை அளிக்கிறது. எனவே உடனடியாக இந்த இடத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மது அருந்தும் கூடம் போன்று...

கொத்தனார் கனகசபை:- செந்துறை பகுதியில் முக்கியமான இடமாக இருந்த இந்த பகுதி தற்போது பயனற்று கிடக்கிறது. தற்போது இந்த இடத்தை மது அருந்தும் கூடும் போன்று மது பிரியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த பகுதி மாசடைந்து வருகிறது. எனவே இந்த இடத்தை உடனடியாக சீரமைப்பது அவசியமாகும்.

நிதி ஒதுக்கப்படவில்லை

Tags:    

மேலும் செய்திகள்