டத்தோ சாமிவேலு மரணம்: தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல்

மலேசியாவில் 29 ஆண்டுகள் மூத்த மந்திரியாக இருந்த டத்தோ சாமிவேலு மரணத்திற்கு, தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-09-15 20:17 GMT

கோப்புப்படம்

கோலாலம்பூர்,

மலேசியா வாழ் தமிழக பூர்வீக தமிழர்களில் தனிச்சிறப்புடன் வாழ்ந்தவர் டத்தோ சாமிவேலு. மலேசிய இந்திய காங்கிரசின் தலைவராக பதவி வகித்த இவர், 29 ஆண்டுகள் பல்வேறு துறைகளில் மந்திரியாக பணியாற்றியவர்.

தமிழர்கள் மேம்பாட்டிற்காகவும், தமிழ்மொழி வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தவர். முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் நேற்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86.

கோலாலம்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள டத்தோ சாமிவேலு உடலுக்கு தலைவர்கள் பலர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த டத்தோ சாமிவேலுவின் மனைவி பெயர் இந்திராணி. இவர்களுக்கு வேல்பாரி எனும் ஒரு மகன் இருக்கிறார்.

டத்தோ சாமிவேலு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், 'மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அங்கு 29 ஆண்டுகளுக்கு மேல் அமைச்சரவையில் இடம்பெற்று சேவை செய்த டத்தோ சாமிவேலு மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

டத்தோ சாமிவேலு உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. மலேசிய நாட்டு அரசியலில் மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்த, அன்னாரது இழப்பால் வேதனையில் வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், டத்தோ சாமிவேலு மறைவு மலேசிய மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'டத்தோ சாமிவேலு மறைவு மலேசியாவில் வாழும் இந்தியர்களுக்கு பெரும் இழப்பாகும். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்