சரக்கு வாகனங்களில் ஆபத்து பயணம்
பழனி பகுதியில் சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் ஆபத்து பயணம் மேற்கொள்கின்றனர்.
பழனி முருகன் கோவிலுக்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் வேன், கார் மூலம் வந்து செல்கின்றனர். அதேபோல் வெளியூர் பக்தர்கள் பஸ், ரெயில் மூலம் பழனிக்கு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பழனிக்கு வரும் பக்தர்கள் ஆபத்தான முறையில் சரக்கு வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக டிராக்டர், லாரியில் சரக்கு ஏற்றும் பகுதியில் அமர்ந்து செல்லும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுபற்றி போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சரக்கு வாகனங்களில் பயணித்தால் ஏற்படும் விபத்து குறித்து வாகன ஓட்டிகளுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.