பாலத்தில் சாகச பயணம் செய்யும் வாகன ஓட்டிகள்

பாலத்தில் சாகச பயணம் செய்யும் வாகன ஓட்டிகள்

Update: 2022-09-15 11:41 GMT

திருப்பூர்

திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றின் குறுக்காக செல்லும் புதிய மேம்பாலத்தின் கட்டுமான பணி பாதியில் நிற்கிறது. இதன் காரணமாக இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஆபத்தான வகையில் பயணித்து வருகின்றனர்.

பாதியில் நிற்கும் பணி

திருப்பூர் காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றின் குறுக்காக பழமையான தரைப்பாலம் உள்ளது. நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தாலும் இந்த தரைப்பாலம் நீரில் மூழ்கி விடும் இதனால் இப்பகுதியில் வாகனப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டு விடும். காலேஜ் ரோட்டில் இருந்து மங்கலம் ரோட்டிற்கு இந்த பாலம் வழியாக வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக செல்வதால் இந்த தரைப்பாலத்தின் அருகில் புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பணி தொடங்கப்பட்டு சில வருடங்கள் ஆகிவிட்ட பின்னரும் பாலத்தின் கட்டுமான பணி நிறைவடையாமல் உள்ளது. குறிப்பாக பாலத்தின் 2 பக்கமும் இணைப்பு ரோடு அமைக்கப்படாமல் உள்ளது. இங்கு தற்போது தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இதேபோல் பெரும்பாலான வாகன ஓட்டிகள் தரைப்பாலத்தை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது இப்பகுதியில் பிரதான குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் தரைப்பாலம் வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சாகச பயணம்

ஒரு சில நேரங்களில் இருசக்கர வாகனங்கள் மட்டும் தரைப்பாலம் வழியாக செல்ல முடிகிறது. இவ்வாறு அனைத்து வாகனங்களும் மேம்பாலத்தோடு இணையும் மண்சாலை வழியாக செல்கின்றன. இந்த சாலை தரைமட்டத்திலிருந்து உயரமாக உள்ள நிலையில் எந்த தடுப்பு சுவரும் இன்றி காணப்படுகிறது. அதுமட்டுமின்றி, சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. வாகனத்தின் சக்கரம் சற்று சறுக்கினாலும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக இந்த சாலையில் எதிரெதிரே வாகனங்கள் செல்லும் போது வாகன ஓட்டிகள் சாலையின் ஓரத்தில் சாகச பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. காலை மற்றும் மாலை நேரத்தில் இவ்வழியாக அதிக வாகனங்கள் செல்லும் போது இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் திக்... திக்கென்ற மனநிலையில் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். எனவே ஏதேனும் ஆபத்து நிகழும் முன் இந்த மேம்பாலத்திற்கு இணைப்பு சாலை அமைத்து பாலத்தின் கட்டுமான பணி முழுமையடைவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

==================


Tags:    

மேலும் செய்திகள்