சுட்டெரிக்கும் வெயிலால் வறண்டுபோன அணைகள்; கோடை காலத்தில் குடிநீர் தேவை சமாளிக்கப்படுமா?
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் அணைகள் வறண்டு கிடக்கின்றன. இதனால் கோடை காலத்தில் குடிநீர் தேவையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை தன்னகத்தே கொண்டு உள்ளது. இங்கு வட கிழக்கு, தென்மேற்கு பருவமழை காலத்தில் பொழியும் மழைநீர் 11 அணைகளில் சேமித்து வைக்கப்பட்டு, ஆறு, கால்வாய்களில் பாசனத்துக்கு திறந்து விடப்படுகிறது.
குடிநீர் ஆதாரம்
இதில் நெல்லை மாவட்டத்தில் 6 அணைகளும், தென்காசி மாவட்டத்தில் 5 அணைகளும் உள்ளன. இந்த இரு மாவட்டங்களை பொறுத்தவரை கடும் வெள்ளத்தையும் சந்தித்து உள்ளன, கடும் வறட்சியையும் எதிர்கொண்டு உள்ளன.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாய்ந்தோடும் தாமிரபரணி ஆறு அந்த மாவட்டங்கள் மட்டுமின்றி தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஆற்றில் பல இடங்களில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் எடுத்து பொதுமக்களுக்கு குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பணியை குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்துகிறது. இதுதவிர மற்ற ஆறுகள், பெரிய கால்வாய்களிலும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நேரடியாக உறை கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
சுட்டெரிக்கும் வெயில்
தற்போது கோடை காலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருகிறது. 100 டிகிரியை தாண்டி வெயிலின் தாக்கம் உள்ளது. ஏற்கனவே வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் பொய்த்து போனது. இதனால் அணைகள் முழுமையாக நிரம்பாமல் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையில் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் 70 அடி உயரம் தண்ணீர் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தற்போது 16.65 அடி மட்டுமே உள்ளது. அந்த அணையின் மொத்த கொள்ளளவு 5,500 மில்லியன் கனஅடி ஆகும். அதில் 121 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதேபோல் 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையில் 80 அடி தண்ணீர் இருந்த நிலையில் தற்போது 41 அடி மட்டுமே உள்ளது.
வறண்டுபோன அணைகள்
118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையில் கடந்த ஆண்டு 93 அடி தண்ணீர் இருந்தது. ஆனால் தற்போது 75 அடி மட்டுமே உள்ளது. மாவட்டத்தில் இந்த அணையில் மட்டுமே ஓரளவுக்கு, அதாவது 1,875 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. மற்றபடி வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய 3 அணைகளும் வறண்டு கிடக்கின்றன.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 6 அணைகளிலும் கடந்த ஆண்டு இதே நாளில் 41 சதவீதம் தண்ணீர் இருந்தது. ஆனால் தற்போது 19 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது. இதுதவிர நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 1,097 குளங்கள் உள்ளன. அதில் 1,000 குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன.
தென்காசி-தூத்துக்குடி
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய 5 அணைகளும் குறைந்த தண்ணீர் கொள்ளளவு கொண்ட அணைகள் ஆகும். அதிலும் தற்போது தண்ணீர் குட்டை போல் குறைந்த அளவே காணப்படுகிறது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. மானாவாரி பகுதிகள் வானம் பார்த்த பூமியாக வெடித்து கிடக்கின்றன.
வழக்கமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், நீர்நிலைகள் வறண்டு கிடப்பதாலும் குடிநீர் தட்டுப்பாட்டின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும் என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
குடிநீர் தேவையை சமாளிக்குமா?
தற்போது அணைகளில் இருக்கும் தண்ணீர் இருப்பு கோடை காலத்தில் போதுமானதாக இருக்குமா? குடிநீர் தேவையை சமாளிக்குமா? என்பது குறித்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கூறிய கருத்துகளை பார்ப்போம்.
பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த ஜெயசுதா:- எங்கள் வீடு அமைந்திருக்கும் பகுதி கீழநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி ஆகும். இங்கு வாரம் ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்படுகிறது. கிடைக்கும் குடிநீரை அதிக நாட்கள் சேமித்து வைக்க முடியவில்லை. இதனால் 2 நாட்களுக்கு பிறகு பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டிக்கு சென்று தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்துகிறோம். தாமிரபரணி ஆற்றின் அருகில் உள்ள மக்களுக்கே இந்த நிலை உள்ளது. எனவே, குடிநீர் பிரச்சினைக்கு தொலைநோக்கு திட்டங்கள் தீட்டி செயல்படுத்த வேண்டும். கீழநத்தம் பஞ்சாயத்து மாநகராட்சி போன்று மக்கள்தொகை அதிகம் கொண்ட பகுதி ஆகும். இங்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து சிறப்பு திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெள்ளநீர் கால்வாய்
திசையன்விளையை சேர்ந்த சக்திவேல்:- இந்த ஆண்டு மழை சரியாக பெய்யாததால் கிணறுகளில் நீர்மட்டம் உயரவில்லை. இந்த பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பவில்லை. நிலத்தடி நீர்மட்டம் 400 அடிக்கு கீழ் சென்று விட்டது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் தண்ணீர் வாரம் ஒருமுறை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. சிலர் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சுவதால் சீராக கிடைப்பது இல்லை.
தண்ணீர் லாரி மூலம் 1,000 லிட்டர் தண்ணீர் ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. சிலநேரங்களில் விரும்பும் நாட்களில் அந்த தண்ணீரும் கிடைப்பது இல்லை. குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க வெள்ளநீர் வடிகால் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அடையக்கருங்குளம் பஞ்சாயத்து துணைத்தலைவர் மதனகிருஷ்ணன்:- பாபநாசம் காரையாறு மற்றும் சேர்வலாறு அணைகள் முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. பாபநாசத்தில் இருந்து அம்பை வரை அதாவது மணிமுத்தாறு அணை தண்ணீர் வந்து சேரும் இடம் வரையில் தாமிரபரணி ஆற்றுக்குள் 40-க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கிருந்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குடிநீர் எடுத்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். இதற்காக கோடை காலத்தில் வழக்கமாக அணைகளில் தேவையான தண்ணீர் இருப்பு வைக்க வேண்டும். ஆனால் நடப்பாண்டு அணையில் தண்ணீர் மிகக்குறைவாக உள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் உறைகிணறுகள் வெளியே தெரிந்து ஓடை போல் தண்ணீர் ஓடுகிறது. அதற்காக உறைகிணற்றை சுற்றி தண்ணீர் செல்லும் வகையில் மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து பணி செய்து உள்ளோம். எனவே, முன்னெச்சரிக்கையாக குடிநீர் தேவைக்கு முன்னுரிமை கொடுத்து, பாபநாசம் அணையில் குறைந்தபட்சம் 50 அடி தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். மேலும் பாபநாசம் மலைப்பகுதியில் கூடுதலாக தண்ணீரை தேக்கும் வகையில் புதிய திட்டங்களும் செயல்படுத்த வேண்டும்.
இதுதவிர பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றை மாசுப்படுத்தும் வகையில் சேலை, கழிவுப்பொருட்களையும் வீசுகிறார்கள். இதன்மூலம் குடிநீர் மாசுபடுகிறது. எனவே, பாபநாசம் பகுதியில் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய குடிநீர் திட்டம்
தென்காசி சிவந்தி நகரை சேர்ந்த ஜெயச்சந்திரன்:- தென்காசி நகரில் பல பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருகிறது. சில பகுதிகளில் 5 மற்றும் 6 நாட்களுக்கு ஒரு முறை வருகிறது. தற்போது தென்காசி பகுதியில் கடும் வெயில் அடித்து வருவதால் குற்றாலம் அருவிகள் வறண்டு காணப்படுகின்றன. தென்காசி நகருக்கு குற்றாலம் குடிநீர் மற்றும் தாமிரபரணி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பல பகுதிகளில் குடிநீர் பிரச்சினை இருக்கும் சூழலில் தென்காசி நகரில் இதுவரை பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
இருப்பினும் மாவட்ட தலைநகரான தென்காசி நகருக்கு என தனியாக ஒரு திட்டம் தீட்டப்பட்டு எந்த நேரத்திலும் குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனென்றால் தாமிரபரணி குடிநீர் முறையாக வரும் சூழலில் குற்றாலம் குடிநீரை சேமிக்கும் அளவில் பெரிய குடிநீர் தொட்டிகள் அமைக்க வேண்டும்.
தட்டுப்பாடு இல்லை
பெரியவர் நட்டாத்தி நயினார் குலசேகரன் நீர்வள நிலவள பாதுகாப்பு பேரவை தலைவர் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த செல்வம் என்ற வெங்கடசுப்பிரமணியன்:- தாமிரபரணி ஆறு பல ஊர்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஏமாற்றம் அளித்துள்ளது. ஆனாலும் மணிமுத்தாறு அணையில் போதிய நீர் இருப்பு உள்ளது. மழை அளவு குறைந்ததால் நிலத்தடி நீர் மட்டுமே குறைந்து உள்ளது. இதனால் குடிநீர் பற்றாக்குறை என்ற பேச்சுக்கு இடம் இல்லை. பொதுப்பணித்துறையும், தமிழக குடிநீர் வடிகால் வாரியமும் தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைக்கு வழங்கும் தண்ணீருக்கு எந்தவித கணக்கும் காட்டுவதில்லை. தொழிற்சாலைகளுக்கு தட்டுப்பாடு என்று கூடுதல் தண்ணீர் வழங்குவதற்கு செயற்கையான குடிநீர் தட்டுப்பாட்டை உருவாக்கி விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுத்தி வருகின்றனர் என்பதே உண்மை நிலை.
மேலும் அனைத்து உள்ளாட்சி பகுதிகளுக்கு தாமிரபரணி ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பாரத பிரதமர் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கி குடிநீர் தேவையை பூர்த்தி செய்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு தற்போது இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிகாரிகள் பேட்டி
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக தாமிரபரணி ஆறு இருக்கிறது. இந்த ஆற்றில் தற்போது மணிமுத்தாறு அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடியும், பாபநாசம் காரையாறு அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. எனவே இந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தற்போதைய நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் சமாளித்து விடலாம். இதற்காக தற்போது கூடுதல் நேரம் மோட்டார்கள் இயக்கப்படுவதுடன், ஊழியர்களும் அதிக நேரம் வேலை செய்து வருகிறார்கள். ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை பெய்து அணைகளுக்கு நீர்வரத்து இருக்கும். அதன்பிறகு நிலைமை சீராகி விடும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றனர்.