ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

எரவாஞ்சேரி ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி, புதிதாக கட்ட மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-02-15 19:00 GMT

எரவாஞ்சேரி ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி, புதிதாக கட்ட மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சேதம் அடைந்த குடிநீர் தொட்டி

நாகை மாவட்டம் திருமருகல் அருகே எரவாஞ்சேரி ஊராட்சி தேவங்குடியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

இந்த குடிநீர் தொட்டியில் குழாய்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் கீழத்தெரு, நடுத்தெரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதம் அடைந்து காணப்படுகிறது.

கிராம மக்கள் எதிர்பார்ப்பு

அதில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து குடிநீர் கசிந்து வீணாகிறது. இதனால் நேரடியாக மோட்டாரில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வீணாக உள்ள சேதம் அடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கழிவுநீர் வருகிறது

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த சக்திவேல் கூறியதாவது:- தேவங்குடி நடுத்தெருப் பகுதியில் வசிக்கும் மக்களின் நலன் கருதி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி சேதம் அடைந்ததால், கடந்த 5 ஆண்டுகளாக மோட்டாரில் இருந்து நேரடியாக குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார் குளத்திற்கு அருகில் இருப்பதால் குளத்தில் உள்ள கழிவுநீரும், குடிநீரில் கலந்து வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது. எனவே புதிதாக குடிநீர் தொட்டி கட்டித்தர வேண்டும்.

ஆபத்தை உணராத சிறுவர்கள்

அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி:-

சிறுவர்கள் ஆபத்தை உணராமல் சேதம் அடைந்த தொட்டியின் அருகே விளையாடி வருகிறார்கள். பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பயன் இல்லை. ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும். ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்