சேதமடைந்த நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை அகற்ற வேண்டும்

சூரன்விடுதி, ஆலங்காடு பகுதிகளில் சேதமடைந்த நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-06-11 17:29 GMT

வடகாடு:

அரசு பள்ளி கட்டிடங்கள்

வடகாடு அருகே சூரன்விடுதி மற்றும் ஆலங்காடு பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த கட்டிடங்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய சூழலில் இருந்து வருகிறது. இந்த சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு இருந்தும் இதுவரை அகற்றப்படாமல் இருந்து வருகிறது.

நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் பள்ளிகளுக்கு விடப்பட்ட விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் இதுவரை சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் அகற்றப்படாமல் இருப்பதால் பள்ளி மாணவர்களது பெற்றோர்கள் அதிருப்தி அடைந்த நிலையில் இருந்து வருகின்றனர்.

பெற்றோர்கள் கோரிக்கை

ஏற்கனவே நெல்லையில் பள்ளி கழிப்பறை கட்டிடம் இடிந்து விழுந்து, 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சேதமடைந்த நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்ற தமிழக அரசு பள்ளி கல்வித்துறை மூலமாக உத்தரவிட்டு இருந்தது.

இதனையடுத்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களும் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை கணக்கெடுப்பு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்ற மாவட்ட கலெக்டர் பட்டியலை வெளியிட்டு இருந்தார். ஆனால் இதுவரை சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்றாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலதாமதம் செய்து வருவதாக பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். எனவே சூரன்விடுதி மற்றும் ஆலங்காடு பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் உள்ள சேதமடைந்த கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்