சேதமடைந்த மேலாளவந்தசேரி ஊராட்சி அலுவலகம்
நீடாமங்கலம் ஒன்றியத்தில் சேதமடைந்த மேலாளவந்தசேரி ஊராட்சி அலுவலகத்தை இடித்து விட்டு புதிய அலுவலகம் கட்ட வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீடாமங்கலம்;
நீடாமங்கலம் ஒன்றியத்தில் சேதமடைந்த மேலாளவந்தசேரி ஊராட்சி அலுவலகத்தை இடித்து விட்டு புதிய அலுவலகம் கட்ட வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊராட்சி அலுவலகம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள காரிச்சாங்குடி கீழத் தெருவில் மேலாளவந்தசேரி ஊராட்சி அலுவலகம் உள்ளது.இந்த அலுவலகம் 1990-ம் ஆண்டு கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி சுமார் 1,648 மக்கள் தொகை கொண்ட ஊராட்சியாக உள்ளது.இந்த ஊராட்சி அலுவலகத்தின் உள்பகுதியில் மின் மீட்டர் உள்ள இடம், அலுவலக கோப்புகள் வைக்கப்பட்டுள்ள இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே கசியும் போது சிமெண்டு காரைகள் கீழே விழுகிறது.
புதிய கட்டிடம்
இதனால் ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட ஊராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் அலுவலகத்துக்கு வர அச்சப்படுகின்றனர். மக்கள் தங்களது கிராமத்தில் அத்தியாவசிய தேவைகளையும், குறைபாடுகளையும் ஊராட்சி தலைவரிடம் தெரிவிக்க ஊராட்சி அலுவலகத்துக்கு வந்து செல்வதால் ஊராட்சி அலுவலக கட்டிடம் பழுது காரணமாக அசம்பாவிதம் ஏற்பட உள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேலாளவந்தசேரி ஊராட்சி அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு புதிய ஊராட்சி அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.