முல்லைப்பெரியாற்றில் சேதமடைந்த உறை கிணறுகள்

உப்புக்கோட்டை பகுதியில் முல்லைப்பெரியாற்றில் உள்ள உறைகிணறுகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2023-03-10 19:00 GMT

உறைகிணறுகள் சேதம்

போடி ஊராட்சி ஒன்றியம் உப்புக்கோட்டை, தேனி ஊராட்சி ஒன்றியம் உப்பார்பட்டி ஆகிய 2 கிராமங்களுக்கு இடையே முல்லைப்பெரியாறு செல்கிறது. இந்த ஆற்றில் உப்புக்கோட்டை பகுதியில் குடிநீர் உறிஞ்சுவதற்கு 10-க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த கிணறுகளில் இருந்து உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்ரகாளிபுரம், மேலச்சொக்கநாதபுரம், சுந்தரராஜபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதேபோல் உப்பார்பட்டி - கோவிந்தநகரம் கூட்டு குடிநீர் திட்டம் முலம் தப்புக்குண்டு, தாடிச்சேரி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் உப்புக்கோட்டை பகுதியில் முல்லைப்பெரியாற்றில் மணல் அள்ளபட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள உறை கிணறுகள் சேதமடைந்துள்ளது.

தொற்றுநோய் அபாயம்

மேலும் அந்த பகுதியில் கழிவுநீர் அதிகமாக ஆற்றில் கலக்கிறது. அவை சேதமடைந்த உறைகிணறுகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் குடிநீரில் கழிவுநீர் கலந்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே முல்லைப்பெரியாற்றில் சேதமடைந்த உறைகிணறுகளை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்