அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்

Update: 2023-05-27 19:36 GMT

பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதமடைந்து உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பலத்த காற்றுடன் மழை

தஞ்சையில் கடந்த சில நாட்களாக வெயில் 100 டிகிரிக்கு மேல் வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5.00 மணி அளவில் கருமேகங்கள் திரண்டு வந்து, திடீரென மழை பெய்தது. இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் தஞ்சையில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இந்த நிலையில் கோடை பருவத்தில் பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் தற்போது பெய்த மழையால் சாய்ந்து சேதமடைந்தது. குறிப்பாக குளிச்சப்பட்டு, மாரியம்மன் கோவில், கத்தரிநத்தம் தளவாய்பாளையம் உள்ளிட்ட பகுதியில் சூறாவளி காற்றை போல் வேகமாக வீசி பலத்த மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள மரங்கள் சாய்ந்தன.

நெற்பயிர்கள் சேதம்

மேலும் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

குளிச்சப்பட்டு, கத்தரி நத்தம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் இன்னும் சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் நெற்பயிர்கள் அனைத்தும் நேற்று பெய்த மழையால் வயலில் சாய்ந்து மழை நீரில் மூழ்கி அழுகிவிடும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்து உள்ளனர் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்