பயறு வகை பயிர்கள் பாதிப்பு

வாய்மேடு, திருமருகல் பகுதியில் கோடை மழையால் பயறு வகை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-05-02 18:45 GMT

வாய்மேடு:

வாய்மேடு, திருமருகல் பகுதியில் கோடை மழையால் பயறு வகை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வாய்மேடு

நாகை மாவட்டம் வாய்மேடு, தலைஞாயிறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. நேற்று முன் தினம் இரவு தொடங்கிய மழை நேற்று காலை வரை நீடித்தது.

வாய்மேடு, தலைஞாயிறு, ஓரடியம்புலம், வாட்டாகுடி, உம்பளச்சேரி, ஆயக்காரன்புலம், தென்னடார், பஞ்சநதிக்குளம், தாணிக்கோட்டகம், தகட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கோடைகாலத்தையொட்டி எள், கடலை மற்றும் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.

இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால் பயிர்கள் வயலில் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் எள் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. தற்போது பெய்த கனமழை எள் மற்றும் கடலை சாகுபடிக்கு தேவையற்ற மழையாகும். நேற்று பெய்த கனமழையால் அனைத்து வயல்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது.

திருமருகல்

திருமருகல், சீயாத்தமங்கை, திருப்புகலூர், அம்பல், பொறக்குடி, போலகம், திருப்பயத்தாங்குடி, திருக்கண்ணபுரம், தென்னமரக்குடி, ஏனங்குடி, சேஷமூலை, வாழ்குடி, விற்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் உளுந்து, பயறு சாகுபடி செய்யப்பட்டு 80 சதவீதத்திற்கு மேல் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளது.

மீதமுள்ள 20 சதவீத அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

மகசூல் குறையும்

நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் உளுந்து, பயறு அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பருத்தி பூக்கும் நிலையில் இருப்பதால் தொடர்ந்து பெய்யும் மழையால் பூக்கள் உதிர்ந்து மகசூல் குறையும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்