சீர்காழி பகுதியில் தொடர்மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு

சீர்காழி பகுதியில்தொடர் மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே பயிர்க்காப்பீடு செய்ய இந்த மாதம் இறுதிவரை அவகாசம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-21 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி பகுதியில்தொடர் மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே பயிர்க்காப்பீடு செய்ய இந்த மாதம் இறுதிவரை அவகாசம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொட்டித்தீர்த்த கனமழை

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் ஒரே நாளில் 22 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

இந்நிலையில் மீண்டும் கடந்த வாரம் ஒரே நாளில் வரலாறு காணாத அளவுக்கு 43 செ.மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சீர்காழி பகுதியில் வைத்தீஸ்வரன் கோவில், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, வடகால், எடமணல், திருமுல்லைவாசல், விளந்திட சமுத்திரம், அகனி, வள்ளுவக்குடி, மருதங்குடி, புங்கனூர், கொண்டல், ஆதமங்கலம், பெருமங்கலம், கன்னியாகுடி, கதிராமங்கலம், எடக்குடி வடபாதி, திருநகரி உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின.

இந்த மாதம் இறுதி வரை...

தற்போது மழைநீர் வடிய தொடங்கி வருகிறது. பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் அழுகி முற்றிலும் நாசமாகிவிட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மத்திய அரசு நவம்பர் 15-ந் தேதி வரை பயிர்க்காப்பீடு செய்ய காலக்கெடு விதித்திருந்தது. தற்பொழுது எதிர்பாராத மழை பெய்தால் விவசாயிகள் முறையாக பயிர்க்காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பயிர்க்காப்பீடு ெசய்ய நேற்று வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் போதிய வருமானம் இல்லாததால் இந்த கால நீட்டிப்பை இந்த மாதம் இறுதி வரை வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்