கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு

சோளிங்கர் நகராட்சியில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றப்படும் கழிவு நீரால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.

Update: 2023-02-13 17:37 GMT

நகராட்சி கூட்டம்

சோளிங்கர் நகராட்சி கூட்டம், நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பழனி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதி குறைகள், செய்ய வேண்டிய பமிகள் குறித்து பேசினர்.

8-வது வார்டு உறுப்பினர் டி.கோபால் பேசும் போது சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட பாரதி நகர், எம்.எம்.நகர், காமராஜர் நகர், திரவுபதி நகர், இந்திரா நகர் பகுதிகளில் நகராட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் பூங்கா, விளையாட்டு மைதானம், சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும், பஸ் நிலையத்தில் பயணிகள் பயன்படும் விதமாக சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். தேடிரடிவீதி, பாட்டி குளம், போர்டின் பேட்டை விநாயகர் கோவில், புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் சோடியம் மின்விளக்கு அமைக்க வேண்டும்.

நிலத்தடி நீர் பாதிப்பு

கால்நடைகளால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனை முறைப்படுத்த வேண்டும். நகராட்சி முழுவதும் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகளை கணக்கெடுத்து முறைப் படுத்த வேண்டும், மேற்கு பஜார் விநாயகர் கோவில் பகுதியில் இருந்து வாரச்சந்தை அருகே உள்ள பாலம் வரைக்கும் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்தார்.

5-வது வார்டு உறுப்பினர் ஆஞ்சநேயன் பேசும் போது சோளிங்கர் நகராட்சியில் இருந்து வெளியேற்றப்படக்கூடிய கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றப்படுவதாலும், அதிகாரிகள் அலட்சியம் காரணமாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. எனவே கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும். தினசரி மார்க்கெட் கட்டிடம் கட்ட உள்ள நிலையில் காய்கறி ஏற்றி வரும் வாகனங்கள் வந்து செல்ல தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஏரி பாசன கால்வாயில் நகராட்சி கழிவுநீரை விடக்கூடாது என தெரிவித்தார்.

வெளிநடப்பு

16-வது வார்டு உறுப்பினர் சாரதி பேசுகையில் சோளிங்கர் நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யாமல் ஏரி பாசன கால்வாயில் விடப்படுவதால் 16-வது வார்டு கீழாயண்ட மோட்டூர் மெயின் ரோடு சாலையில் இருபக்கம் உள்ள கால்வாயில் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்களால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். கழிவுநீர் வெளியேற புதிய கால்வாய் அமைக்க வேண்டும் என்றார்.

பின்னர் பா.மக.வை சேர்ந்த அவரும், 23-வது வார்டு உறுப்பினர் கோமளா ஏழுமலை ஆகிய இருவரும் தங்கள் வார்டுகளில் இதுவரை குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய், மின்விளக்கு உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்ய வில்லை எனக் கூறி இருவரும் வெளிநடப்பு செய்தனர்.

நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு அனைத்து நகராட்சி உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என தலைவர் தமிழ்செல்வி கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்