வகுப்பறைகள் சேதம்; திறந்தவெளியில் படிப்பதால் மாணவர்கள் அவதி
தீனட்டி அரசு தொடக்க பள்ளியில் வகுப்பறைகள் சேதம் அடைந்தது. இதனால் திறந்தவெளியில் அமர்ந்து படிப்பதால் மாணவர்கள் அவதி அடைந்து உள்ளனர். எனவே, உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கோத்தகிரி,
தீனட்டி அரசு தொடக்க பள்ளியில் வகுப்பறைகள் சேதம் அடைந்தது. இதனால் திறந்தவெளியில் அமர்ந்து படிப்பதால் மாணவர்கள் அவதி அடைந்து உள்ளனர். எனவே, உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தரைத்தளம் பழுது
கோத்தகிரி அருகே தீனட்டி கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக புதியதாக பள்ளி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு விரிவான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சத்து 95 ஆயிரம் செலவில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கட்டும் பணி தொடங்கியது.
கொரோனா பரவல் காரணமாக கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டதால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணி நிறைவடைந்தது. இதையடுத்து புதிய பள்ளி செயல்பட தொடங்கியது. நடப்பு கல்வியாண்டில் மாணவ-மாணவிகள் 64 பேர் படித்து வருகின்றனர். இதற்கிடையே பள்ளியின் தரைத்தளம் சரியாக அமைக்காததால், ஆங்காங்கே குழி விழுந்து காணப்படுகிறது. இதனால் தற்போது தரைத்தளத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
மாணவர்கள் அவதி
மேலும் புதிதாக டைல்ஸ் பதிக்க ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், பள்ளி விடுமுறையின் போது பணி மேற்கொள்ளாமல், பள்ளி நேரத்தில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வளாகத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக அவர்கள் திறந்தவெளியில் அமர வைக்கப்பட்டு உள்ளனர். ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் பாடங்களை எடுத்து வருகிறார்கள். இதன் காரணமாக வெயில் மற்றும் குளிர்ந்த காலநிலையில் மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறும்போது, தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தீனட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சீரமைப்பு பணி நடப்பதாக கூறி மாணவர்களை வெளியே அமர வைத்து பாடம் நடத்தி வருகின்றனர். கோடை விடுமுறையில் சீரமைப்பு பணியை மேற்கொண்டு இருக்கலாம். தற்போது மேற்கொள்வதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. மழை பெய்யும் போது மாணவர்கள் நனைந்து சிரமப்படுகின்றனர். எனவே, பள்ளியில் தரைத்தள சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.