விபத்துகளை ஏற்படுத்தும் கணபதிஅக்ரகாரம் பாலக்கரை சந்திப்பு சாலை
விபத்துகளை ஏற்படுத்தும் கணபதிஅக்ரகாரம் பாலக்கரை சந்திப்பு சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அய்யம்பேட்டை;
விபத்துகளை ஏற்படுத்தும் கணபதிஅக்ரகாரம் பாலக்கரை சந்திப்பு சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாய்க்காலில் பாலம்
கும்பகோணம் - திருவையாறு நெடுஞ்சாலையில் கணபதி அக்ரகாரம் கிராமம் உள்ளது. இங்கிருந்து அய்யம்பேட்டை செல்லும் சாலை சுமார் 2 கி.மீட்டர் தூரம் உள்ளது. பல மாதங்களுக்கு முன்பு கணபதி அக்ரகாரம் பாலக்கரை சந்திப்பு பகுதி வாய்க்காலில் பாலம் கட்டப்பட்டது. அதன் பிறகு சாலை எதுவும் அமைக்கப்படாமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் தினமும் விபத்தில் சிக்குகிறார்கள்.எனவே இந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கணபதி அக்ரகாரம் கிராம மக்கள் கூறியதாவது:-கணபதி அக்ரகாரம் - அய்யம்பேட்டை சாலை வழியே இரண்டு அரசு பஸ்களும், இரண்டு மினி பஸ்களும் சென்று வருகின்றன. ஏராளமான பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் இப்பகுதி சுற்று வட்டாரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ- மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
விபத்துகள்
கணபதி அக்ரகாரம் காவிரி ஆற்றில் புதிய பாலம் கட்டிய பிறகு இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது கணபதி அக்ரகாரம் பாலக்கரை சந்திப்பு பகுதியில் உள்ள வாய்க்காலில் ஒரு பாலம் கட்டப்பட்டது. அதன் பின்னர் கடந்த 10 மாதங்களாக இந்த பகுதி சாலையை சீரமைக்காமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் இந்த சாலை வழியே செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் தினமும் விபத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக சைக்கிளில் செல்லும் மாணவ- மாணவிகள் கீழே விழுந்து செல்கின்றனர்.
சீரமைக்க கோரிக்கை
மேலும் இந்த சாலையின் நடுவே மேல் நிலை நீர்த் தேக்க தொட்டியும் உள்ளது. இதன் அருகிலேயே டாஸ்மாக் மதுபான கடை உள்ளதால் இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி மீது விழுந்து விபத்து ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து பல முறை மனுக்கள் கொடுத்தும் இந்த சாலை அப்படியே தான் உள்ளது. எனவே இந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.