பழுதடைந்து வரும் தேவாசிரியர் மண்டபத்தில் மூலிகை ஓவியங்கள் பாதுகாக்கப்படுமா?

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பழுதடைந்து வரும் தேவாசிரியர் மண்டபத்தில் பழமை வாய்ந்த மூலிகை ஓவியங்கள் அழிந்து வருகிறது. எனவே இந்த மண்டபத்தையும், ஓவியத்தையும் பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-31 18:45 GMT

திருவாரூர்;

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பழுதடைந்து வரும் தேவாசிரியர் மண்டபத்தில் பழமை வாய்ந்த மூலிகை ஓவியங்கள் அழிந்து வருகிறது. எனவே இந்த மண்டபத்தையும், ஓவியத்தையும் பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓவியங்கள்

தமிழ்நாட்டு ஓவியக்கலை மிக தொன்மையான வரலாற்றை கொண்டது. இந்த ஓவியங்கள் பெரிதாக கோவில்களில் இடம் பெற்றன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி வண்ணக் கலவை தயாரித்து அழியாத ஒவியங்களை தீட்டுவதில் வல்லமை பெற்று இருந்தனா். இதில் மூலிகை ஓவியங்கள் நீங்காத இடத்தை பெற்று உள்ளன. பல நுறு ஆண்டுகளை கடந்து இன்றும் வியப்புட்டு வகையில் ஆன்மிக வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் இந்த கோவில் ஓவியங்கள் உள்ளன.

தியாகராஜர் கோவில்

திருவாரூர் தியாகராஜர் கோவில் தோன்றிய வரலாற்றை கணக்கிட முடியாத மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஆகும். இந்த கோவில்

சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் விளங்குகிறது. இந்த கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி மற்றும் செங்கல் நீரோடை ஐந்து வேலி என்ற பரப்பளவில் அமைந்துள்ளது. ராஜராஜ சோழனின் தாயார் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள அசலேஸ்வரர் சன்னதியை வணங்கி சென்ற நிலையில் இந்த சன்னதி வடிவில் தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டதாகவும் வரலாறு உள்ளது.

தேவாசிரியர் மண்டபம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் கிழக்கு கோபுர வாசல் பகுதியில் தேவாசிரியர் மண்டபம் என்கிற ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் தேவர்கள் சிவபூஜை செய்த இடமாக கருதப்படுகிறது. திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு வருபவர்கள் தேவாசிரிய மண்டபத்தை வணங்கி விட்டு பின்னர் தான் கோவிலுக்குள் செல்வார்கள்.இந்த மண்டபத்தின் மேல் கூரையில்மராட்டிய மன்னர்கள் காலத்தில் மூலிகைகளால் மட்டுமே ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தியாகராஜர் தேவலோகத்தில் இருந்து தேர் மூலமாக பூலோகம் வரும் ஓவியம் மற்றும் குதிரை வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம் என தியாகராஜர் புடைசூழ வருகை தருவது போன்ற ஓவியம், வாண வேடிக்கைகள், 18 வகையான வாத்தியங்கள் உள்ளிட்ட ஓவியங்கள் இங்கு வரையப்பட்டுள்ளன.

மழைநீர் கசிவு

ஆயிரங்கால் மண்டபம் முழுவதும் கருங்கல் கொண்டு கட்டப்பட்ட நிலையில் மேற்பரப்பில் கருங்கற்களை இணைக்கும் இடத்தில் சிறிது, சிறிதாக விரிசல்கள் ஏற்பட்டு மழை நீர் உள்ளே கசிய தொடங்கியது. இவ்வாறு கசியவடைந்த மழைநீர் மண்டபம் மேற்கூரையில் வரையப்பட்ட ஓவியங்களை சேதமடைய செய்தது.எந்தவித பராமரிப்பும் இன்றி உள்ள ஆயிரங்கால் மண்டபம் திருவிழா காலங்களில் மட்டுமே திறக்கப்பட்டு, சாமி எழுந்தருளி விழா நடக்கிறது.மற்ற நாட்களில் எந்தவித பயன்பாடும் இன்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. உரிய பாரமரிப்பின்றி கட்டிடத்தில் அழுக்குகள் படிந்தும், வவ்வால்களில் கூடாரமாக மாறி அதன் கழிவுகள் போன்ற காரணங்களால் ஓவியங்கள் சிதைந்து வருகிறது.

சீரமைக்க கோரிக்கை

ஈசனின் புகழை எடுத்து சொல்லும் அறிய ஒவியங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் அழிந்து வருகிறது. தமிழக அரசு மீண்டும் பழமை மாறாமல் மூலிகைகளை கொண்டு தேவாசிரியர் மண்டபத்தில் சிதைந்த ஓவியங்களை வரைந்து புனரமைக்க வேண்டும். மேலும் தேவாசிரியர் மண்டபத்தை முழுமையாக சீரைமக்க வேண்டும்.எனவே கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள பழுதுகளை நீக்க வேண்டும். இந்த மண்டபத்தின் மேற்கூரையில் தியாகராஜர் பெருமையை பிரதிபலிக்கும் மராட்டியர் கால ஓவியங்களை ஓவிய வல்லுனர்களை கொண்டு, பழமைமாறாமல் இயற்கை வண்ணங்கள், மூலிகைகள் கொண்டு புதுப்பிக்க வேண்டும் என பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து திருவாரூர் பகுதியை சேர்ந்த தேவகுமார் கூறியதாவது:-

திருவாரூர் தியாகராஜர் கோவில் பழமையும், பெருமையும் வாய்ந்தது. இந்த கோவிலில் கிழக்கு கோபுர வாசல் பகுதியில் உள்ள தேவாசிரியர் மண்டம் 63 நாயன்மார்கள் அனைவரும் கூடிய இடம். கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்கு வணங்கிவிட்டு உள்ளே செல்வார்கள். தியாகராஜர் தேவலோகத்தில் இருந்து புலோகம் வந்ததற்கான நிகழ்வு தேவாசிரியர் மண்டபத்தின் கூரையில் மிக அற்புதமாக மூலிகை ஓவியங்கள் மூலம் காட்சிகளாக படைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மண்டபம் தற்போது பராமரிப்பின்றி பழுதடைந்து வருகிறது. மழைக்காலத்தில் தண்ணீர் ஒழுகுவதால் கட்டிடம் பலவீனம் அடைந்து வருகிறது. எனவே அறநிலையத்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினாா்.

Tags:    

மேலும் செய்திகள்