பழனி அருகே நிரம்பி வழியும் வரதமாநதி அணை

கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழையால் பழனி அருகே உள்ள வரதமாநதி அணை நிரம்பி வழிகிறது.

Update: 2022-06-18 13:56 GMT

திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு குடிநீர், பாசன ஆதாரமாக பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி அணைகள் உள்ளன. கொடைக்கானல், சவரிக்காடு மலைப்பகுதிகளில் மழை பெய்யும்போது மேற்கண்ட அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படும். அதன்படி கடந்த சில தினங்களாக கொடைக்கானல் மற்றும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதையடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

குறிப்பாக பழனி வரதமாநதி அணை தனது முழு கொள்ளளவான 66.47 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. அணைக்கு வினாடிக்கு 170 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நிரம்பியதால், அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. வெள்ளியை வார்த்து ஊற்றியதை போல அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி கொண்டிருக்கிறது. காண்போரின் கண்களை கொள்ளை கொள்ளும் இந்த காட்சியை பார்க்க, ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அணை பகுதிக்கு படையெடுக்கின்றனர். இவர்கள், அணை பகுதியில் நின்று செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

இதேபோல் 65 அடி உயரமுள்ள பழனி பாலாறு-பொருந்தலாறு அணையில் தற்போது 47.47 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 98 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 24 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பழனி பகுதியில் உள்ள அணைகள் நிரம்பி வருவதால் பழனி, ஆயக்குடியில் நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்