10 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற ஆணை மடுவு அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றப்படுமா?- 50 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் எதிர்பார்ப்பு

Update: 2022-11-19 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் ஆணை மடுவு அணைக்கட்டு திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று 50 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆணை மடுவு அணைக்கட்டு திட்டம்

தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் ஏற்காடு மலையின் அடிவாரத்தில் மாவட்ட எல்லையில் ஆணை மடுவு பகுதி அமைந்துள்ளது. ஏற்காடு மலைகளில் பெய்யும் மழை நீர் மற்றும் மலைகளில் உருவாகும் ஊற்று நீரை அடிப்படையாக கொண்டு உருவாகும் வேப்பாடி ஆறு, ஆணை மடுவு பகுதியில் தேங்குகிறது. பின்னர் பொம்மிடி, தொப்பையாறு வழியாக ஓடி இறுதியாக மேட்டூர் அணையில் சேர்கிறது.

ஆண்டு முழுவதும் நீர்வரத்து உள்ள ஆணை மடுவு பகுதியில் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் சிறிய தடுப்பணை கட்டப்பட்டது. இந்தநிலையில் ஆணைமடுவு பகுதியில் அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பொம்மிடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள்.

10 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி

இதுதொடர்பாக கடந்த 2004-ம் ஆண்டு அணை கட்டுவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு 18 ஆண்டுகளை கடந்தும் இங்கு அணை கட்டுவதற்கான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இங்கு அணை கட்டப்பட்டால் பொம்மிடி, பில்பருத்தி, துறிஞ்சிப்பட்டி, பி.பள்ளிப்பட்டி, வாசி கவுண்டனூர், கேத்துரெட்டிபட்டி, சிந்தல்பாடி, ஜாலியூர், ரேகடஅள்ளி, மணிபுரம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதன் மூலம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வாய்ப்பு உருவாகும். எனவே ஆணைமடுவு அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

நிரந்தர தீர்வு

துறிஞ்சிபட்டியை சேர்ந்த விவசாயிமுருகன்:-

ஏற்காடு மலையின் பின் பகுதியில் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அமைந்துள்ளது. இங்கு மலை அடிவாரத்தில் ஆணைமடுவு என்ற இடத்தில் ஏற்காடு மலை பகுதிகளில் இருந்து வரும் மழை நீர், குளம் போல தேங்கி நின்று வேப்பாடி ஆற்றில் கலந்து ஓடுகிறது. ஆண்டு முழுவதும் நீர்வரத்து உள்ள ஆணைமடுவு பகுதியில் இயற்கையாகவே அணை கட்டுவதற்கான சூழல் உள்ளது.

இங்கு அணை கட்டப்பட்டால் 50-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்களில் கால்வாய்கள் மூலம் உபரி நீரை நிரப்ப முடியும். இதன் மூலம் மொரப்பூர் அருகே உள்ள நவலை கிராமம் வரை சுமார் 80 கி.மீ. சுற்றளவுக்கு நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்த முடியும். இதன் மூலம் இந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். எனவே இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி

பொம்மிடியை சேர்ந்த ஆறுமுகம்:-

வேப்பாடி ஆறு ஆணை மடுவு திட்டத்தை நிறைவேற்ற ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே ஆய்வு மேற்கொள்ளபட்டு அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. ஆனால் அப்போது நிதி இல்லாத காரணத்தால் அணை கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் சுமார் 80 கி.மீ. சுற்றளவுக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். குடிநீர் பிரச்சினை வராது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன் பெறுவார்கள். வெள்ளப்பெருக்கு காலங்களில் இங்கிருந்து மேட்டூர் அணைக்கு செல்லும் உபரிநீர் யாருக்கும் பயன்படாமல் கடலில் கலப்பது தவிர்க்கப்படும்.

பொம்மிடியில் இருந்து 33 கி.மீ. தொலைவில் ஏற்காடு அமைந்துள்ளதால், அணை கட்டப்படும் பட்சத்தில் ஆணை மடுவு பகுதி சுற்றுலாத்தலமாக உருவாகும். இடைப்பட்ட பகுதிகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெறும். 50-க்கும் மேற்பட்ட ஏரிகளில் நீர் நிரம்பி விவசாயம் செழிக்கும். இந்த அணை கட்டப்பட்டால் விவசாயிகள் ஆயக்கட்டு தீர்வை வருமானம் அரசுக்கு கிடைக்கும். எனவே அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்