மாற்றுரை வரதீஸ்வரர்-பூமிநாத சுவாமி கோவில் திருவிழா

மாற்றுரை வரதீஸ்வரர்-பூமிநாத சுவாமி கோவில் திருவிழா நடைபெற்றது.

Update: 2023-05-24 20:23 GMT

கொள்ளிடம் டோல்கேட்:

திருவிழா

மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் உள்ள பாலாம்பிகை சமேத மற்றுரை வரதீஸ்வரர் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலையில் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. இதைத்தொடர்ந்து பக்தர்கள் கொடி படத்துடன் கோவில் உள் பிரகாரத்தை வலம் வந்து, கொடி மரத்தை சென்றடைந்தனர். இதைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு, காளை படம் பொருந்திய கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்ட சுவாமி, அம்பாளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுகிறார். வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தெய்வேந்திரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தேரோட்டம்

இதேபோல் மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாதசாமி கோவிலில் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, பின்னர் கேடயத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ரிஷப வாகனம் வரையப்பட்ட கொடியை கோவில் அர்ச்சகர் கொடிமரத்தில் ஏற்றினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் திக்விஜயம் வீதி உலா நடைபெற்றது.

29-ந் தேதி காலை மாப்பிள்ளை அழைப்பு, ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஜூலை 1-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியுடன் தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் நிர்வாகம் மற்றும் திருவாவடுதுறை ஆதீன கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்