தலித் கிறிஸ்தவர்கள் தேவாலய வளாகத்தில் கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டம்

எஸ்.சி. பட்டியலில் சேர்த்திட வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் தலித் கிறிஸ்தவர்கள் தேவாலய வளாகத்தில் கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-10 18:54 GMT

எஸ்.சி. பட்டியல்...

மதத்தின் அடிப்படையில் தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்.சி. (தாழ்த்தப்பட்ட) அந்தஸ்து மறுக்கப்படும் சட்டத்தை 1950-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ந்தேதி வெளியிட்ட ஜனாதிபதி ஆணையின் 3-ம் பிரிவை மத்திய அரசு நீக்கிட வேண்டும். நீதியரசர் ரெங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையின்படி தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்த்திட வேண்டும். இது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விரைந்து விசாரிக்க வேண்டும்.

தலித் கிறிஸ்தவர், இஸ்லாமியர்களை பட்டியலின பட்டியலில் சேர்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று துக்க நாளாக அனுசரித்து அனைத்து தலித் கிறிஸ்தவ கிராமங்களின் முக்கிய இடங்களிலும், அங்குள்ள தேவாலய வளாகங்களிலும் கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இதேபோல் பெரம்பலூர் புனித பனிமய மாதா தேவாலய வளாகத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கம், தலித் கிறிஸ்துவ தேசிய பேரவை, பட்டியலினத்தார் மற்றும் பழங்குடியினர் பணிக்குழு ஆகியவற்றின் சார்பில் கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் மகிமை தாஸ் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மறைவட்ட முதன்மை குருவும், புனித பனிமய மாதா ஆலய பங்கு தந்தையுமான ராஜமாணிக்கம், பெரம்பலூர் டி.இ.எல்.சி. சபை குரு அருள்குமார், அன்னமங்கலம் டி.இ.எல்.சி. சபை குரு வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கத்தின் மாநில பொருளாளரும், தலித் கிறிஸ்துவ தேசிய பேரவையின் தேசிய தென்மண்டல தலைவருமான சந்தானதுரை கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்ட செயலாளர் அகஸ்டின், கத்தோலிக்க சங்கத்தின் குடந்தை மறை மாவட்ட துணைத் தலைவர் பீட்டர் ராஜ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு பட்டை அணிந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்