தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் குறைகள் பற்றிய பதிவுகள்.

Update: 2022-06-20 18:48 GMT



குண்டும் குழியுமான சாலை

வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்துக்கு செல்லும் பிரதான சாலை 5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. தார் பெயர்ந்து ஜல்லிக்கற்கள் கால்களை பதம்பார்க்கும் வகையில் உள்ளது. சைக்கிள்கள், மோட்டார்சைக்கிள்கள், நடந்து செல்வோர் சிரமப்படுகின்றனர். அந்தச் சாலையை சரி செய்ய மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை நடவடிக்கை எடுக்குமா?

-சு.ஷன்மதி. சென்னாவரம்.

கிராம சேவை மைய கட்டிடம் பயன்பாட்டுக்கு வருமா?

திருவண்ணாமலை மாவட்டம் வேளையாம்பாக்கத்தில் கிராம சேவை மைய கட்டிடம் புதிதாக கட்டப்பட்டது. ஆனால், அதை இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனால் கட்டிடம் சேதம் அடைந்து வருகிறது. அப்பகுதியில் வசிப்போர் தங்களின் கால்நடைகளை அங்கு கட்டி வருகின்றனர். அதை மக்கள் பயன்பாட்டுக்கு ெகாண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவக்குமார், வேளையாம்பாக்கம்.

சாலை அமைக்க வேண்டும்

வேலூர் சத்துவாச்சாரி 2-வது மண்டலம் 17-வது வார்டுக்கு உட்பட்ட சி.எம்.சி. காலனி 4-வது தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து முடிந்தது. ஆனால் அங்கு சாலை அமைக்காமல் விட்டு விட்டனர். அவ்வபோது பெய்து வரும் மழையால் அப்பகுதி சேறும் சகதியுமாக உழவடித்த சாலைபோல் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கீழே விழுந்து விபத்தை சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மலரவன், வேலூர்.

ஏரியில் கொட்டப்படும் கோழிக்கழிவுகள்

ராணிப்பேட்டை மாவட்டம் பழையனூர் கிராம ஏரியில் கோழிக்கழிவுகளை கொண்டு வந்து கொட்டி மாசுப்படுத்துகிறார்கள். கோழிக்கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவோரை அடையாளம் கண்டு ஊராட்சி நிர்வாகம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

-ராஜா, பழையனூர்.

 மோசமான சாலையால் மக்கள் அவதி

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தையொட்டி உள்ள மாநகராட்சி பூங்கா அருகில் ெஜ.பி.சாலை மிக மோசமாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒவ்வொரு வார்டாக பணிகளை மேற்கொள்ளாமல் ஒட்டு மொத்த வேலூர் மாநகராட்சியில் உள்ள அனைத்துச் சாலைகளையும் ஒரே நேரத்தில் பெயர்த்துப்போட்டு பணிகளை மெத்தன போக்கில் செய்து வருகிறார்கள். இதனால் வயது முதிர்ந்தவர்கள், சிறுவர், சிறுமிகள் சாலையில் நடக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். இந்தச் சாலையை உடனே சீரமைத்துத் தர ேவண்டும்.

-பார்த்திபன், வேலூர்.

பள்ளியில் சீருடை, புத்தகம் வழங்க வேண்டும்

வேலூர் மாநகராட்சி 10-வது வார்டு பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. பள்ளி சீருடை, புத்தகம் அனைவருக்கும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சீருடை, புத்தகம் வழங்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

-எஸ்.ராதாகிருஷ்ணன், காட்பாடி.

சுடுகாட்டில் கொட்டப்படும் குப்பைகள்

திருப்பத்தூரில் உள்ள பெரியார்நகர் பகுதியில் சுடுகாடு உள்ளது. அங்கு தகன மேடையும் உள்ளது. நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை சேகரித்து வந்து சுடுகாட்டில் கொட்டுகிறார்கள். சுடுகாட்டை சுற்றி 300 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. தற்போது பெய்து வரும் மழையால் சுடுகாட்டில் தண்ணீர் தேங்கி உள்ளது. சுடுகாட்டில் குப்பைகளை கொட்ட நகராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும்.

-மணிவண்ணன், திருப்பத்தூர்.

 கால்வாயை தூர்வாருவார்களா?

குடியாத்தம் தாலுகா பரதராமி கிராமத்தில் பழைய காவல் நிலைய வீதி முக்கியமானதாகும். இந்த வழியாகத்தான் மெயின்ரோட்டுக்கு செல்ல வேண்டும். இந்தச் சாலையின் இருபுறமும் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாராமல் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி சுகாதாரச் சீர்கேடாக உள்ளது. அந்த வழியாக மக்கள் சென்று வர சிரமப்படுகிறார்கள். மாவட்ட ஊராட்சி வளர்ச்சித்துறை நடவடிக்கை எடுத்து அந்தச் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாயை மெயின்ரோடு மட்டத்துக்கு உயர்த்தி அமைக்க ேவண்டும். தற்போது கால்வாயை தூர்வாருவார்களா?

-ஜானகிராமன், பரதராமி.

Tags:    

மேலும் செய்திகள்