'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த சாலை
திண்டுக்கல்-பழனி சாலையில் மாங்கரை பிரிவு முதல் ரெட்டியார்சத்திரம் வரையுள்ள சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இரவில் விபத்துகளும் அதிகம் நடக்கிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரேம், திண்டுக்கல்.
விபத்து அபாயம்
தேனி விஸ்வநாததாஸ் நகரில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையின் குறுக்கே சாக்கடை கால்வாய்க்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த தரைப்பாலத்தின் மேல்புறம் பதிக்கப்பட்ட சிமெண்டு மூடி சாலையைவிட சற்று உயரமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சிமெண்டு மூடியை மாற்ற வேண்டும் அல்லது சாலையின் உயரத்தை சற்று அதிகரிக்க வேண்டும்.
-செல்வேந்திரன், தேனி.
பயணிகள் நிழற்குடை வேண்டும்
உத்தமபாளையம் தாலுகா சுக்காங்கல்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.
-பரமசிவம், சுக்காங்கல்பட்டி.
குடிநீர் குழாயில் உடைப்பு
செம்பட்டியை அடுத்த பச்சைமலையான்கோட்டை பிரிவு பகுதியில் சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-பெருமாள், செம்பட்டி.