தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் புகார்கள் பற்றிய பதிவுகள்.
கூடுதல் காரிய மண்டபம் கட்டித்தர வேண்டும்
பேரணாம்பட்டு நகரம் ஆயக்கார வீதி கடைசியில் இந்துக்களின் மயானம் உள்ளது. அதன் அருகே நீத்தார் ஈமச்சடங்கு காரிய மண்டபம் உள்ளது. இறந்தவர்களின் உறவினர்கள் ஈமச்சடங்கு காரியம் செய்ய ஒரே நேரத்தில் 3 அல்லது 4 பேருக்கும் மேற்பட்ட உறவினர்கள் காரிய மண்டபத்துக்குள் நுழைந்தால், அங்குப் போதிய இடவசதி இல்லை. எனவே காரிய மண்டபத்துக்கு அருகிலேயே புதிதாக ஒரு இடத்தை தேர்வு செய்து, அதில் கூடுதலாக ஒரு காரிய மண்டபம் கட்டித்தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.
குப்பை கூளமாக காணப்படும் கிரிவலப்பாதை
ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்கின்றனர். திருவண்ணாமலை கிரிவல பாதை கடந்த சில தினங்களாக குப்பை கூளமாகவே காட்சியளிக்கிறது. முறையாக குப்பைகள் அகற்றப்படாததால் காணும் இடமெல்லாம் பிளாஸ்டிக் கவர்கள், டீக்கப், காகித டம்ளர்கள் போன்றவைகளாகவே உள்ளன. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லிங்கம், திருவண்ணாமலை.
உயர் மின் கோபுரம் பயன்பாட்டுக்கு வருமா?
திருவண்ணாமலை நகராட்சி பகுதிக்குட்பட்ட முத்து விநாயகர் கோவில் தெருவில் நகராட்சி ஆணையர் குடியிருப்பு உள்ளது. இதன் அருகில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர் மின் கோபுரம் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இந்தப் பகுதி இரவிலும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உயர் மின் கோபுரம் விளக்கை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்.
-அண்ணாமலை, திருவண்ணாமலை.
பழைய வாகனங்களில் பாம்புகள் நடமாட்டம்
வாணியம்பாடி-கச்சேரி ரோடு அருகே உள்ள பகுதியில் தாலுகா அலுவலகம், காவல் நிலையங்கள், சிறை வளாகம், சார்பதிவாளர் அலுவலகம், காவலர்கள் குடியிருப்பு, நீதிபதி குடியிருப்பு, நீதிமன்றங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் பல்வேறு துறைகள் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒரே பகுதியில் குவிந்து கிடக்கின்றன. அந்த வழியாக போக்குவரத்து பிரச்சினை இருந்தாலும், இந்தப் பழைய வாகனங்களில் ஏராளமான விஷ பாம்புகள் அப்பகுதியில் சுற்றித் திரிகிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, இந்த வாகனங்களை பொது ஏலத்தில் விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருளானந்தம், வாணியம்பாடி.
மின் விளக்குகள் எரியவில்லை
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்-சோளிங்கர் ரோடு ஸ்டேட் பாங்க் பகுதி, பழைய பஸ் நிலையம் பகுதி, அரசு மருத்துவமனை மற்றும் திருப்பதி பிரதான சாலைகளில் உள்ள மின் கம்பங்களில் மின் விளக்குகள் எரியவில்லை. சம்பந்தபட்ட அதிகாரிகள் மின்விளக்குகளை எரிய விட வேண்டும்.
-ரகுராம், அரக்கோணம்.
கால்வாயில் குப்பைகளை எரிக்கும் அவலம்
வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகே ஆற்காடு சாலை ஓரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயில் மர்மநபர்கள் குப்பைகளை கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் புகை மூட்டத்தால் அவதிப்படுகின்றனர். மேலும் கால்வாயில் கழிவுநீர் செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மலரவன், வேலூர்.
கழிவுநீர் ஊருக்குள் நுழையும் அபாயம்
கே.வி.குப்பம் கால்நடை மருத்துவமனை அருகில் கசக்கால்வாய் செல்கிறது. இதில் அருகில் உள்ள பொதுமக்கள் சோபா மெத்தைகள், பிளாஸ்டிக், பேப்பர்கள், கழிவுப் பொருட்கள், பலவகை குப்பைகளை கொண்டு வந்துது கொட்டுகிறார்கள். இதே பகுதியில் மண்ணில் மக்காத பிளாஸ்டிக் கழிவுகளால் கால்வாயில் கழிவுநீர் செல்ல வழிஇல்லாமல் தேங்கி நோய்பரப்பும் கிருமிகள் உருவாகி வருகிறது. இதனால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ஊருக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கரியமாணிக்கம், கே.வி.குப்பம்.
'தினத்தந்தி'க்கு நன்றி
ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் அசோக்நகர் பகுதியில் உள்ள ரத்தன்சந்த் நகர் குடிநீர் தேக்கத் தொட்டிக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி, தொட்டியைச் சுற்றிலும் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. இதுகுறித்து 'தினத்தந்தி்'யில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியால் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்திக்கும் நன்றி.
-சரவணன், சமூக ஆர்வலர், அரக்கோணம்.