'தினத்தந்தி'-டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய 'வெற்றி நிச்சயம்' நிகழ்ச்சி

‘தினத்தந்தி’-டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய ‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-04-26 18:45 GMT

திருச்செந்தூர்:

"விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம் கிடைக்கும்" என்று மாணவ-மாணவிகளுக்கு தூத்துக்குடி கலெக்டர் கி.செந்தில்ராஜ் அறிவுரை வழங்கினார்.

'வெற்றி நிச்சயம்' நிகழ்ச்சி

'தினத்தந்தி'- திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி இணைந்து பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகள் அடுத்ததாக என்ன படிக்கலாம் என்பதற்கான வழிகாட்டும் 'வெற்றி நிச்சயம்' நிகழ்ச்சி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது.

கல்விப்பணியில் 'தினத்தந்தி' என்ற தலைப்பில் 'தினத்தந்தி' தலைமை பொது மேலாளர் (புரமோசன்ஸ்) ரெ.தனஞ்செயன் பேசினார். கல்லூரி முதல்வர் ஞா.வைஸ்லின் ஜிஜி வரவேற்று பேசினார்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ் தலைமை தாங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நான் படிக்கின்ற காலத்தில் இந்த 'வெற்றி நிச்சயம்' நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளேன். அந்த நிகழ்ச்சி இன்றும் என் நினைவில் உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு துறை குறித்து பேசுகிறவர்களின் பேச்சுக்களை நீங்கள் கவனித்து வந்தால், இந்த நிகழ்ச்சி உங்களுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும்.

விடாமுயற்சி

மாணவர்களாகிய நீங்கள் கல்லூரியில் படிக்கும் போதே நாம் இந்த பணிக்கு செல்ல வேண்டும் என்ற இலக்குடன் படிக்க வேண்டும். அந்த இலக்கை அடைய விடாமுயற்சியுடன், தன்னம்பிக்கையுடன் உழைக்க வேண்டும். அப்படி உழைத்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற வேண்டுமானால் அதிகமாக பத்திரிகை படிக்க வேண்டும். எனது தந்தை பத்திரிகை படிக்க வேண்டும் என்று கூறியதால் நான் 6 வயதில் இருந்தே 'தினத்தந்தி' படித்து வருகிறேன்.

உலக நாடுகளில் 2040-ம் ஆண்டு 30 சதவீதம் புதிய வேலையாக இருக்கும். அதற்கு உங்களை நீங்கள் தயார் படுத்திக்கொண்டால் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனைகள்

இந்த நிகழ்ச்சியில் பொறியியல் துறை குறித்து டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் சு.சிவனணைந்தபெருமாள், மருத்துவ படிப்பு மற்றும் 'நீட்' நுழைவு தேர்வு குறித்து கோவை பாரதியார் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் ஆர்.காயத்ரி, சட்டத்துறை குறித்து வக்கீல் பி.ஆர்.ஜெயராஜன், போட்டித்தேர்வுகளும், வேலைவாய்ப்பு, சிவில் சர்வீஸ் படிப்புகளும் குறித்து ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ்.நாராயணராஜன் ஆகியோர் பேசினார்கள்.

கல்விப்பணியில் ஆதித்தனார் கல்வி நிறுவனங்கள் என்ற தலைப்பில் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி, கலை மற்றும் அறிவியல் குறித்து உதவி பேராசிரியர் ச.ஸ்ரீமதி, விளையாட்டுத்துறை குறித்து டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பொ.சாம்ராஜ், பட்டய கணக்கியல் படிப்பு குறித்து மதுரை சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் டி.தவமணி ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

மாணவ-மாணவிகள்

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் மேலாளர் வெங்கட்ராமராஜ், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குருசெல்வி, மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நெல்லை 'தினத்தந்தி' மேலாளர் த.ஜனார்த்தனன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சிகளை மதுரையை சேர்ந்த புலவர் வை.சங்கரலிங்கம் தொகுத்து வழங்கினார். மதிய உணவு இடைவேளையின்போது நன்னிலம் ஜி.கேசவனின் பலகுரல் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் வந்து செல்வதற்கு வசதியாக இலவச பஸ் வசதியும் செய்யப்பட்டு இருந்தது. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவு, குளிர்பானம், பிஸ்கட், மாணவ- மாணவிகளுக்கு குறிப்பேடு, எழுது பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்