'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-24 21:19 GMT

பராமரிக்காத கழிப்பறை

கவுந்தப்பாடி பஸ்நிலையத்தில் உள்ள கழிப்பறை பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. பயணிகள் இந்த கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே ஊராட்சி நிர்வாகிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சுத்தப்படுத்தவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கவுந்தப்பாடி பஸ்நிலைய கழிப்பறையை சுத்தப்படுத்துவார்களா?

பாரதீய பயணிகள் ஆட்டோ சங்கம், கவுந்தப்பாடி.

நுழைவு பாலத்தில் தண்ணீர்

ஈரோடு வெண்டிபாளையத்தில் 2 ரெயில்வே நுழைவு பாலங்கள் உள்ளன. 2 பாலங்களின் தரைப்பகுதியிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த இடத்தில் ரோடு பழுதாவதோடு, இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரெயில்வே நுழைவு பாலங்களின் கீழ் தண்ணீர் தேங்காதவாறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்களா?

பரதன், ஈரோடு.

பழுதடைந்த சாலை

வெள்ளாங்கோவிலில் உள்ள அரசு பள்ளிக்கூடம் மற்றும் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் ரோடு பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டி உள்ளது. எனவே பழுதடைந்த ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், வெள்ளாங்கோவில்.

சாக்கடை வசதி இல்லை

ஆர்.என்.புதூர் சூரியம்பாளையம் குறிஞ்சி நகரில் முறையான சாக்கடை வசதி இல்லை. இதனால் கழிவுநீர் பாதைகளில் வழிந்தோடுகிறது. சுகாதாரமும் பாதிக்கப்பட்டு விட்டது. கடுமையாக துர்நாற்றமும் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் குறிஞ்சி நகரில் சாக்கடை வசதி ஏற்படுத்தி கொடுக்கவேண்டும்.

பொதுமக்கள், சூரியம்பாளையம்.

ஆபத்தான மின்கம்பம் 

அந்தியூரை அடுத்த வேம்பத்தி ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள மின்கம்பத்தின் உச்சி பகுதியில் செடி கொடிகள் படர்ந்து உள்ளன. மின்விளக்குகளை பராமரிப்பதற்காக மின்வாரிய பணியாளர்கள் ஏறினால் கூட அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் நிலை உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி-கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

முருகேசன், வெள்ளாளபாளையம்.

புதர் மண்டிய அங்கன்வாடி

தாளவாடி அடுத்த ஓசூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் செடி கொடிகள் படர்ந்து புதர்மண்டி கிடைக்கிறது. இதனால் விஷ ஜந்துக்கள் அங்கன்வாடி அருகே ஊர்ந்து வந்துவிடுகின்றன. இதன்காரணமாக குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப பெற்றோர் அச்சம் அடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கன்வாடியை ஆக்கிரமித்துள்ள புதர்களை அகற்ற ஆவன செய்ய வேண்டும்.

பொதுமக்கள், தாளவாடி.

பாதை நடுவில் பழுதான கம்பம் 

தாளவாடியை அடுத்த திகனாரை ஊராட்சிக்கு உட்பட்ட சோளகர் தொட்டி கிராமத்தில் பாதையின் நடுவே உள்ள மின்கம்பம் பழுதடைந்து கீழே விழும் நிலையில் இருக்கிறது. இதனால் வாகனங்கள் செல்லவும் தடுமாற்றமாக உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் பாதையின் நடுவில் உள்ள பழுதான மின்கம்பத்ைத அகற்றிவிட்டு, ரோட்டு ஓரத்தில் புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.

பொதுமக்கள், சோளகர் தொட்டி.

Tags:    

மேலும் செய்திகள்