'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தார் சாலை வேண்டும்
ஈரோடு அம்பேத்கர் நகர் நாராயணவலசு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தார் சாலை அமைக்கப்படவில்லை. மேலும் சாலையில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதன்காரணமாக ரோட்டில் பொதுமக்கள் நடமாட முடியவில்லை. அதுமட்டுமின்றி கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அம்பேத்கா் நகர்.
நாய்த்தொல்லை
ஈரோடு முத்தம்பாளையத்தில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் அந்த வழியாக வருவோர், போவோரை துரத்துகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி சென்று கடிக்க முயல்கிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் அச்சத்தில் செல்கின்றனர். எனவே பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், முத்தம்பாளையம்.
தேங்கி நிற்கும் மழை நீர்
காஞ்சிக்கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கூடத்தின் முன்பு மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளிக்கூடத்துக்கு மாணவ- மாணவிகள் செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டி உள்ளதால் மாணவ- மாணவிகளுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளிக்கூடம் முன்பு கழிவுநீர் தேங்கி நிற்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், காஞ்சிக்கோவில்.
ஆபத்தான குழி
ஈரோடு சாஸ்தி நகர் வாய்க்கால் மேடு சடையம்பாளையம் ரோட்டில் வாகன போக்குவரத்து தினமும் இருந்து கொண்டே இருக்கும். அந்த ரோட்டில் ஆபத்தான குழி உள்ளது. இந்த குழியால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே ஆபத்தான குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சாஸ்திரி நகர்.
குப்பையை அகற்ற வேண்டும்
கோபியில் நாகர்பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள கீரிப்பள்ளம் ஓடையில் பாலம் இருக்கிறது. இந்த பாலம் அருகே சாலையோரம் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த ரோட்டின் வழியாக பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகிறார்கள். எனவே குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
ஆபத்தான தரைப்பாலம்
அந்தியூர் கெட்டி விநாயகர் கோவில் அருகே தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டது. அதன் 2 பக்கங்களிலும் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் மூட்டைகளில் இருந்து மணல் கொட்ட ஆரம்பித்துவிட்டது. அதனால் பெரிய வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை சரிசெய்யவேண்டும்.
அருள், அந்தியூர்.