'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கவனிப்பில்லா கழிப்பிடம்
கோபி நகராட்சி 23-வது வார்டில் வண்டிப்பேட்டை சாமிநாதபுரம் செல்லும் வழியில் நகராட்சி பொது சுகாதார கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடம் பல மாதங்களாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் தற்போது பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் கழிப்பறை இருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது இந்த கழிப்பறையை பராமரிக்க ஆவன செய்வார்களா?
பொதுமக்கள், கோபி,
சாக்கடை வடிகால் கட்டப்படுமா?
வைரமங்கலம் ஊராட்சி 4-வது வார்டில் சாக்கடை வடிகால் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. ஏராளமான கொசுக்களும் உற்பத்தியாகிவிட்டன. அதனால் நோய் பரவும் நிலையும் உள்ளது. அதனால் ஊராட்சி நிர்வாகம் சாக்கடை வடிகால் கட்டித்தரவேண்டும்.
லட்சுமி, அந்தியூர்
பராமரிக்கப்படாத பூங்கா
கோபி கோசலை நகரில் நகராட்சி பூங்கா (6-வது வார்டு) உள்ளது. இந்த பூங்கா பராமரிக்கப்படாமல் வேலி முட்கள் பல அடி உயரத்துக்கு வளர்ந்துள்ளன. இந்த வேலி முட்களின் கீழே கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் பூங்காவை சுத்தம் செய்து, கழிவுநீர் தேங்காதவாறு பராமரிக்க வேண்டும்.
பொதுமக்கள், கோசலை நகர், கோபி.
ஓடையில் குப்பை
கோபியிலிருந்து பாரியூர் செல்லும் ரோட்டில் கீரிப்பள்ளம் ஓடை செல்கிறது. இந்த ஓடையின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் கீழ் ஏராளமான குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. உடனே குப்பையை அகற்றாவிட்டால் ஓடையில் தண்ணீர் வரும்போது தேங்கி அருகே உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து விடும் நகராட்சி அதிகாரிகள் குப்ைபயை அகற்ற ஆவன செய்வார்களா?
நாதன், கோபி.
குண்டும்-குழியுமான சாலை
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு பி.பி.அக்ரஹாரம் போலீஸ் நிலையம் அருகில் ரோடு குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் இந்த ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது. மேலும் இந்த ரோட்டில் கனரக வாகனங்கள் செல்லமுடியவில்லை. எனவே இந்த ரோட்டை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடு்க்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.