'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-20 20:51 GMT

பள்ளம் சாிசெய்யப்படுமா?

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 15-வது வார்டில் பாரதி ஸ்டேட் வங்கி அருகில் சந்தைக்கடை செல்லும் வழியில் ரோடு உள்ளது. இதில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் கீழே விழுந்து விபத்துகளை சந்திக்கின்றனர். உடனே பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூர்த்தி, புஞ்சைபுளியம்பட்டி.

அடிக்கடி மின்தடை

மொடக்குறிச்சியில் அடிக்கடி இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். இதற்கு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மொடக்குறிச்சி

நாய்கள் தொல்லை

பெருந்துறை அருகே பட்டக்காரன்பாளையம் பெருமாபாளையம் கிராமத்தில் தெருநாய்கள் அதிகமாக சுற்றி திரிகின்றன. அவை தெருவில் செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துரத்தி சென்று கடிக்கின்றன. மேலும் ஆடு, மாடுகளையும் விட்டு் வைப்பதில்லை. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடனே இவைகளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பெருமாபாளையம்.

ஆபத்தான மின்கம்பிகள்

ஈரோடு திண்டல் பெரிய செங்கோடம்பாளையம் பகுதியில் சில நாட்களுக்கு முன் அடித்த பலத்த சூறாவளிக்காற்றால் மேலே சென்ற மின்கம்பிகள் தாழ்வாக வந்துவிட்டன. மாடிப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படுவதற்குள் மின்வாரிய அதிகாரிகள் செங்கோடம்பாளையத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயரத்தில் செல்லும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.

பொதுமக்கள், செங்கோடம்பாளையம்.


பழுதடைந்த நடைமேடை

ஈரோடு ஸ்டோனி பாலத்தில் நடை மேடை பழுதடைந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அதில் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். போக்குவரத்து அதிகம் உள்ள அந்த பகுதியில் நடைமேடை மிகவும் அவசியமாகும். எனவே பழுதடைந்த நடைேமடையை சரிசெய்ய அதிகாரிகள் ஆவன செய்யவேண்டும்.

இளங்கோ, ஈரோடு.

பாராட்டு

பவானி அருகே உள்ள ஆண்டிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய காடையம்பட்டியில் அந்தியூர் மெயின் ரோட்டை இணைக்கும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயன்படாத நிலையில் இருந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டார்கள். இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தற்போது ரோடு போட்டுள்ளார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்கள்.

பொதுமக்கள், பழைய காடையம்பட்டி.

Tags:    

மேலும் செய்திகள்