தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2023-05-17 19:30 GMT

சீரமைக்க வேண்டும்

நல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இலவுவிளை பேளங்காட்டுவிளையில் பேளங்காட்டுகுளம் உள்ளது. இந்த குளத்தின் பக்கவாட்டில் சாலை செல்கிறது. கடந்த ஆண்டு பெய்த மழையில் சாலை இடிந்து குளத்தில் விழுந்தது. இதனால், அந்த வழியாக இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணா, பேளங்காட்டுவிளை.

குப்பை அகற்றப்பட்டது

நாகர்கோவில் கோட்டார் முதலியார்விளை மாசானமுத்து கோவிலின் முன்புறம் உள்ள தெருவில் சிலர் குப்பைகளை கொட்டினர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வந்தது. கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் குப்பை உடனடியாக அகற்றப்பட்டது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

சீரமைக்கப்படுமா?

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கவர்குளம் மறுகால் வழியாக ஒரு ஓடை வால் குளம் செல்கிறது. இந்த ஓடையில் சந்தையடி பகுதியில் உள்ள பெரியவர்களும், குழந்தைகளும் குளிக்கிறார்கள். இந்த ஓடையின் சுவர்கள் சேதமடைந்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடை சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.ராம்தாஸ், சந்தையடி.

சுகாதார சீர்கேடு

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இருந்து ஆலம்பாறை செல்லும் சாலையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் அருகில் குப்பை கொட்டப்பட்டு பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ேமலும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சபரிராஜன், ஆலம்பாறை.

வாகன ஓட்டிகள் அவதி

மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட அதங்கோட்டாசான் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் சிமெண்டு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வே.பாலகிருஷ்ணன், அதங்கோடு.

விபத்து அபாயம்

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையின் இரும்பு தூண்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், பலத்த காற்று வீசினால் எப்போது வேண்டுமானாலும் நிழற்குடை சரிந்து விழுந்து பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, பயணிகள் நலன்கருதி நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினு, குன்னத்தூர். 

----

Tags:    

மேலும் செய்திகள்