தினத்தந்தி புகார் ெபட்டி

தினத்தந்தி புகார் ெபட்டி

Update: 2022-12-21 18:45 GMT

ஆற்றின் கரை கட்டப்படுமா?

தென்தாமரைகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட புன்னையடியில் உள்ள வால் குளத்திற்கு தண்ணீர் செல்லும் ஆற்றின் கரை கடந்த மழையின் போது உடைந்து விழுந்தது. அந்தவழியாக சைக்கிளில் பள்ளிக்குச் சென்ற மாணவன் சரிந்து விழுந்ததையடுத்து கரை உடைந்த இடத்தில் பேரூராட்சி சார்பில் கம்பு நட்டு கயிறு கட்டிவைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே உள்ள சாலை வழியாகத்தான் மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு இருசக்கர வாகனங்களில் பயத்துடன் சென்று வருகின்றனர். இந்த வழியாக பள்ளி, கல்லூரி பஸ்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்களும் செல்கின்றன. எனவே பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆற்றின் கரையை கட்ட வேண்டும்

-பி.அருமைராஜ், புன்னையடி.

சேதமடைந்த சாலை

திருவட்டார் அருகே புத்தன்கடை கூட்டுறவு ரேஷன் கடை எதிரே இருந்து விளாக்கோடு வரை சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு போடப்பட்டுள்ள காங்கிரீட் சாலை முழுமையாக பெயர்ந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் சேதமடைந்து உள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிறிஸ்டோபர், விளாக்கோடு.

தடுக்க வேண்டும்

நாகர்கோவிலில் இருந்து காவல்கிணறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி பகுதியில் மருத்துவ கழிவுகள் அடிக்கடி கொட்டப்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதற்கு முன் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆனந்த், ஆரல்வாய்மொழி.

சுகாதாரம் காக்கப்படுமா?

பூதப்பாண்டியில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன. இந்த பள்ளிகளின் அருகே குப்பைகள் குவியலாக குவிந்து, துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் குவிந்துகிடக்கும் குப்பைகளை அகற்றி, சாக்கடைஓடைகளை தூர்வாரி, பிளீச்சிங் பவுடர் தூவி சுகாதாரம் காக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி

கால்வாயில் தேங்கும் கழிவுகள்

சிற்றாறு பட்டணம் கால்வாய் குலசேகரம் வழியாகப் பாய்கிறது. குலசேகரம் அரசமூடு சந்திப்பு அருகே பெருஞ்சாணி செல்லும் சாலையை இக்கால்வாய் கடக்கும் இடத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் தலையணைகள், துணிகள் மிதந்து வருகின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற பொதுப்பணித்துறையின் நீராதாரப்பிரிவினர் முன்வர வேண்டும். மேலும் கால்வாயில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் மழை நீர் ஓடைகள் வழியாக வந்து கலக்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ் குமார், குலசேகரம்.

குண்டும், குழியுமான சாலை

பாரதப்பள்ளியில் இருந்து வெள்ளாங்கோடு செல்லும் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

-சி.பி.மேக்னோலியா ரொனிட்டா, கன்னியாகுமரி.

வீணாகும் குடிநீர்

திருவிதாங்கோட்டில் இருந்து கோழிப்போர்விளை செல்லும் சாலையில் அமராவதி என்ற இடத்தில் சாலையோரம் குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. இந்த குழாயில் தண்ணீர் ஒழுகும். அதை சரிசெய்வதற்காக குழாயில் உள்ள ஒரு பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுவதற்காக வால்வு அமைக்கப்பட்டுள்ளது., அது வழியாக வெளியேறும் தண்ணீர் கீழ்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் பாய்வதால் அங்கு வசித்து வருபவர்கள் சுகாதார கேட்டினால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே வெளியேறும் குடிநீர் செல்வதற்கான வாடிகால் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மகாதேவன், அமராவதி.

Tags:    

மேலும் செய்திகள்