'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
சிதிலமடைந்து வரும் மின்கம்பம்
திண்டுக்கல் முருகபவனம் இந்திராநகரில் சாலையோரத்தில் உள்ள மின்கம்பம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகானந்தம், திண்டுக்கல்.
குளத்தில் கலக்கும் கழிவுநீர்
திண்டுக்கல் மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி அருகே உள்ள பாறைக்குளம் தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் வீடு, தொழிற்சாலை, மருத்துவமனை ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலக்கிறது. இதனால் குளம் மாசடைந்ததோடு தண்ணீரும் பச்சைநிறத்துக்கு மாறியுள்ளது. எனவே குளத்தை தூர்வாருவதுடன் கழிவுநீர் கலக்காமல் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி.
தெருவில் தேங்கும் கழிவுநீர்
ஆண்டிப்பட்டி தாலுகா பாலசமுத்திரம் கிராமத்தில் சாக்கடை கால்வாய் வசதி முறையாக செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்குகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலகிருஷ்ணன், பாலசமுத்திரம்.
நிறம் மாறி வரும் குடிநீர்
உத்தமபாளையத்தில் குடியிருப்பு பகுதிகளில் வழங்கப்படும் குடிநீர் நிறம் மாறி வருகிறது. இதனால் அதனை குடிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் நிறம் மாறிய குடிநீரை பயன்படுத்தினால் நோய்த்தொற்று ஏற்படுமோ? என்ற அச்சமும் பொதுமக்களுக்கு உள்ளது. எனவே குடிநீரை சுத்தப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பக்ருதீன், உத்தமபாளையம்.
ஆக்கிரமிப்பின் பிடியில் சாலை
பழனி பாரதிதாசன் சாலை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் கழிப்பறை வசதி இல்லாததால் திறந்தவெளியை சிலர் கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றுவதுடன், திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துவதையும் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமநாதன், பழனி.
விளைநிலத்தில் கொட்டப்படும் குப்பைகள்
கம்பத்தை அடுத்த சுருளிப்பட்டியில் விவசாய பயன்பாட்டுக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட நிலத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் அருகில் உள்ள விளை நிலங்களுக்கும் குப்பைகள் சிதறி பரவும் நிலை உள்ளது. எனவே விளை நிலத்தில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பார்த்திபன், சுருளிப்பட்டி.
சாய்ந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி
உத்தமபாளையம் கலிமேட்டுப்பட்டி பகுதியில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியை தாங்கி நிற்கும் சிமெண்டு தூண் அதன் உறுதி தன்மையை இழந்து வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் குடிநீர் தொட்டி சாய்ந்து கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெகதீஸ்வரன், உத்தமபாளையம்.
தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள்
நிலக்கோட்டை தாலுகா பழைய சிலுக்குவார்பட்டியில் உள்ள குளக்கரையோரத்தில் குப்பைகளை கொட்டுவதுடன் அதனை தீ வைத்தும் சிலர் எரித்துவிடுகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிப்பதுடன், சுற்றுச்சூழலும் மாசடைகிறது. மேலும் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களும் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைகளை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சென்றாயன், பழைய சிலுக்குவார்பட்டி.
------------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.