சாலையில் வீணாகும் குடிநீர்
நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் சாஸ்தா கோவில் அருகே சாலையின் அடியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாக சாலையில் பாய்ந்து செல்கிறது. எனவே குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுப்பிரமணியன்,
வடிவீஸ்வரம்.
கழிவறையில் தண்ணீர் இல்லை
தோவாளை தாலுகா அருமநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட அருமநல்லூர் இந்திரா படித்துறை அருகே பெண்களுக்கான பொது கழிவறை உள்ளது. இங்கு பல மாதங்களாக தண்ணீர் வருவதில்லை. இதனால் இதை ெபாதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் பொது இடங்களை பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. கழிவறையில் போதிய தண்ணீர் வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.மகாராஜன், அருமநல்லூர்.
சேதமடைந்த பள்ளி கட்டிடம்
அடைக்காகுழி அரசு நடுநிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த பள்ளி கட்டிடத்தின் காங்கிரீட் மேற்கூரை சேதமடைந்து, சுவர்களில் விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. மழைக்காலங்களில் மழைநீர் வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்கள் படிப்பைத்தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, சேதமடைந்த கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆராய்ந்து அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.
-ரெஜி, அடைக்காகுழி.
தற்காலிக பாலத்தை அகற்ற வேண்டும்
தாழக்குடி பேரூராட்சி சந்தவிளையில் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் பணி நடைபெற்ற போது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. தற்போது புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. ஆனால், பழைய தற்காலிக பாலத்தை இதுவரை அகற்றவில்லை. இந்த பாலத்தின் மேல்பகுதியில் ஆற்றின் வெள்ளம் தேங்கி நின்று அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகும் நிலை உள்ளது. இதனால், அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் நலன்கருதி தற்காலிக பாலத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.எஸ்.சிதம்பரதாணு, தாழக்குடி.
வரலாற்று சின்னம் பராமரிக்கப்படுமா?
ஆசாரிபள்ளம் சந்திப்பில் இருந்து பெரும்செல்வவிளை செல்லும் பாதையில் வேம்பனூர் குளத்தின் அருகே மன்னர்கள் காலத்தில் அரச குடும்பத்தினர் உலா வரும் போது ஓய்வெடுத்து செல்லும் வகையில் கட்டப்பட்ட சுண்ணாம்பு மடம் (அக்பர் பீடம்) எனப்படும் ஓய்வு பீடம் உள்ளது. தற்காலத்தில் இந்த வழியாக காலையில் பலர் நடைபயிற்சி செல்கிறவர்கள் மழை வந்தால் இங்கு ஒதுங்கி நிற்பது வழக்கம். இந்த பீடம் தற்போது மிகவும் சேதமடைந்து இடிந்து விழுந்த நிலையில் உள்ளது. அழிந்து வரும் வரலாற்று சின்னத்தை சீரமைத்து, அழகுபடுத்தி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆ.ஆன்றணி சதீஷ், ஆசாரிபள்ளம்.
நடவடிக்கை எடுக்கப்பட்டது
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட சரக்கல்விளை கால்வாய் கரையில் உள்ள கம்பத்தில் மின் விளக்குக்காக 'சுவிட்ச்' பெட்டி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பெட்டி திறந்த நிலையிலும், தாழ்வாகவும் காணப்பட்டது. அந்த வழியாக செல்லும் சிறுவர்கள் பெட்டியில் கைகளை வைத்து விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழைய சுவிட்ச் பெட்டியை அகற்றிவிட்டு புதிய பெட்டி அமைத்தனர். செய்தி ெவளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.