'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
சுகாதாரக்கேடு அபாயம்
சாணார்பட்டி ஊராட்சி ராமன்செட்டிபட்டி காலனியில் தார்சாலையின் மேற்கு பகுதியில் கழிவுநீர் தொட்டி கட்டுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. அதன்பின்னர் கழிவுநீர் தொட்டி கட்டப்படாததால், பள்ளத்தில் கழிவுநீர் குளம் போன்று தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் விஷப்பூச்சிகளின் தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே கழிவுநீர் தொட்டியை விரைவில் கட்ட வேண்டும்.
-காளிதாஸ், கோணப்பட்டி.
மழைநீர் தேங்கும் பஸ் நிலையம்
கொடைரோடு பஸ் நிலையத்தில் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் சாரல் மழை பெய்தால் கூட குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பயணிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
-ரதிஷ்பாண்டியன், பொம்மணம்பட்டி.
குடிநீர் வசதி தேவை
வடமதுரை ஒன்றியம் பி.கொசவப்பட்டி ஊராட்சி பெருமாள்கோவில்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு வாழும் மக்களுக்கு முறையான குடிநீர் வசதி இல்லை. இதனால் மக்கள் குடிநீருக்காக பெரும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வசதி செய்து தருவார்களா?
-கார்த்திக், சுந்தரபுரி.
சேதம் அடைந்த இருக்கைகள்
பெரியகுளம் பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்டு இருக்கும் இருக்கைகள் சேதம் அடைந்து பல மாதங்களாகி விட்டது. எனினும் இதுவரை இருக்கைகளை சரிசெய்யவில்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அமர முடியாமல் கால்கடுக்க நிற்கும் நிலை உள்ளது. எனவே சேதம் அடைந்தஇருக்கைகளை மாற்றிவிட்டு புதிய இருக்கைகள் அமைக்க வேண்டும்.
-கணேசன், கல்லுப்பட்டி.
கால்வாய் கரையில் குப்பைகள்
உத்தமபாளையத்தில் அரசு மருத்துவமனை எதிரே உள்ள கால்வாயின் கரையோரம் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகின்றன. அந்த குப்பைகள் கால்வாயில் விழுவதால், தண்ணீர் மாசடைகிறது. அதன்மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கால்வாயும் பாழாகி வருகிறது. எனவே கால்வாய் கரையில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், உத்தமபாளையம்.
தெருவில் தேங்கும் கழிவுநீர்
வத்தலக்குண்டு அருகே வெங்கிடாஸ்திரிகோட்டை கிராமத்தில் கழிவுநீர் வெளியேற முறையாக கால்வாய் வசதி இல்லாததால், தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் தொல்லை அதிகரித்து விட்டது. கழிவுநீர் சீராக வௌியேறும் வகையில் ஊருக்கு வெளியே வரை சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும்.
-இளமுருகு பொற்செழியன், வெங்கிடாஸ்திரிகோட்டை.
சேதம் அடைந்த சாலை
ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே செல்லும் சேடப்பட்டி-அழகர்நாயக்கன்பட்டி சாலை சேதம் அடைந்துவிட்டது. இதனால் பள்ளிக்கு சைக்கிளில் வரும் மாணவர்கள் உள்பட அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
-நாகராஜ், சித்தையன்கோட்டை.
நோயாளிகள் அவதி
பழனி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் பகுதி, முதல்-அமைச்சர் காப்பீடு பகுதி ஆகியவற்றில் கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. இதனால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். எனவே கழிப்பறைகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
-சரத், பழனி.
சாக்கடை கால்வாய் வசதி
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள ஐஸ்வர்யாநகர், அங்காளபரமேஸ்வரிநகர், பாலக்குட்டை பகுதிகளில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் தெருக்களில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. அதை தவிர்க்க சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும்.
-பொதுமக்கள், திண்டுக்கல்.
பயன்படாத பயணிகள் நிழற்குடை
தேனி பங்களாமேடு பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. ஆனால் அங்கு பஸ்கள் நிற்காததால், பயணிகள் நிழற்குடை பயன்படவில்லை. இதனால் அது போதை ஆசாமிகளுக்கு திறந்தவெளி மதுபாராக மாறி இருக்கிறது. எனவே அங்கு பஸ்களை நிறுத்தி, பயணிகள் நிழற்குடையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
-கண்ணகி, தேனி.
குடிநீர் மேல்நிலைத்தொட்டி சேதம்
தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி சேதம் அடைந்துவிட்டது. தொட்டியின் தூண்களில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்தபடி அபாயத்தில் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.
-ராஜா, தேவதானப்பட்டி.
சுற்றுலா பயணிகள் தவிப்பு
கம்பம் அருகே உள்ள சுருளி அருவி பகுதியில் கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாததால் முகம் சுழிக்கும் வகையில் உள்ளது. இதனால் அவற்றை பயன்படுத்த முடியாமல் சுற்றுலா பயணிகள் தவிக்கின்றனர். அந்த கழிப்பறை பராமரிக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-குமார், கம்பம்.
--------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.