'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-02 14:47 GMT

சேதமான மேல்நிலை குடிநீர் தொட்டி 

குஜிலியம்பாறை தாலுகா ஆர்.புதுக்கோட்டையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்து வருகிறது. தொட்டியை தாங்கி நிற்கும் தூண்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எந்த நேரத்திலும் மேல்நிலை குடிநீர் தொட்டி இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்து வரும் மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அப்துல் சமது, ஆர்.புதுக்கோட்டை.

மின்கம்பத்தை மாற்ற வேண்டும்

திண்டுக்கல் மாநகராட்சி 6-வது வார்டு பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து விழுந்து வருகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-சதீஷ்குமார், திண்டுக்கல்.

இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்

பழனி பைபாஸ் சாலையில், சிறுவர் பூங்கா அருகே இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கழிவுகளையும் அகற்ற வேண்டும்.

-சாமுவேல், பழனி.

அடிப்படை வசதி வேண்டும்

தேனி வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் நடக்கிறது. இங்கு கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. குப்பைகள் கொட்டுவதற்கு தனியாக இடம் இல்லாததால் சந்தை நடக்கும் இடங்களிலேயே கொட்டப்படுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அகற்றுவதுடன் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-பாலக்குமார், தேனி.

Tags:    

மேலும் செய்திகள்