தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2022-06-29 16:46 GMT

நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆசாரிபள்ளம் அனந்தனார் கால்வாயில் தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள மதகுகள் அனைத்திலும் ஆங்காங்கே குப்பை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அடைத்து உள்ளன. இதனால் கடைமடை வரை விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லாமல் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அனந்தனார் கால்வாயில் போடப்படும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்றி கடைமடை விவசாயிகளின் துயரை துடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர். எஸ். ராஜன், பீச்ரோடு.

பள்ளம் நிரப்பப்படுமா?

நாகர்கோவில் செட்டிகுளம் ஜங்ஷனில் உள்ள பள்ளம் இரவு நேரத்தில் தெரிவது இல்லை. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் பள்ளத்தில் வாகனம் இறங்கியதும் தட்டு தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. மேலும் பின்னால் வரும் வாகனம் வேகமாக வந்தால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி்.ராஜ்குமார், களியங்காடு.

சுகாதார சீர்கேடு

கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட இனயம் கிராமத்தில் மணல் தெரு பகுதியில் சிலர் இரவு நேரத்தில் வீட்டு கழிவுகள் மற்றும் குப்பையை போட்டு செல்கின்றனர்.இந்த பகுதியை சுற்றி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அவ்வாறு கொட்டப்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும் என்று மக்கள் அஞ்சுகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அப்துல் ரசாக், இனயம்.

தெரு நாய்களால் தொல்லை

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் குமரி நெசவாளர் காலனி 4-வது தெருவில் மின் விளக்குகள் எரியவில்லை. மேலும் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படவில்லை. இது தவிர தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் இரவு நேரத்தில் வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். எனவே எரியாத மின் விளக்கை எரிய செய்வதுடன், தோண்டப்பட்ட பள்ளத்தை மூடி, தெரு நாய்களை பிடிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேந்திரன், நெசவாளர் காலனி.

பாதியில் நிற்கும் சாலைப்பணி

கருங்கலில் இருந்து புதுக்கடை செல்லும் சாலையில் தொலையாவட்டம் மின்வாரிய அலுவலகம் முன் காங்கிரீட் சாலை அமைக்கும் பணி நடந்தது. சாலையில் காங்கிரீட் பாதி பகுதிக்கு மட்டுமே போடப்பட்டது. அதன் பிறகு பணி நிறுத்தப்பட்டு 15 நாட்கள் ஆகிறது. எனவே பாதியில் நிற்கும் சாலைப்பணியை முழுமையாக முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுனில்குமார், கருங்கல்.

போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பம்

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு அகஸ்தீஸ்வரம் பெரியசாமி கோவில் தெருவின் நடுவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. வாகனத்தில் வருபவர்கள் கொஞ்சம் அசந்தாலும் மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த மின்கம்பத்தை மாற்றி தெரு ஓரத்தில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-த.அனிதா, பெரியசாமி கோவில் தெரு, அகஸ்தீஸ்வரம்.

Tags:    

மேலும் செய்திகள்