'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-29 15:01 GMT

குப்பைகளால் சுகாதாரக்கேடு 

தேனி அரண்மனைப்புதூர் முல்லைப்பெரியாறு பாலம் அருகே சாலையோரத்தில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைகள் கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அரவிந்தன், தேனி.

நடவடிக்கை எடுப்பார்களா?

பழனி அருகே மானூரில் கோவில் திருவிழாக்கள், விசேஷ நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை மிகவும் அவதிப்படுகின்றனர். தடையை மீறி கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-நவசிரி, பழனி.

மின்விளக்கு வசதி வேண்டும்

திண்டுக்கல் தோமையார்புரம் பைபாஸ் சாலையில் உள்ள மேம்பாலத்தின் இருபுறமும் உள்ள இணைப்பு சாலையில் மின்விளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே மின்விளக்கு வசதியை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-கண்ணன், திண்டுக்கல்.

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

பழனி ஆர்.எப். ரோட்டில் போக்குவரத்து கழக பணிமனை அருகே சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படும் அவல நிலை உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தண்டாயுதம், பழனி.

Tags:    

மேலும் செய்திகள்