'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பள்ளியில் கழிப்பறை வசதி வேண்டும்
தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு இடப்பற்றாக்குறை காரணமாக நூலக கட்டிடத்தில் சில வகுப்புகள் நடைபெற்றது. இதற்கிடையே புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. ஆனால் புதிய கட்டிடத்தில் கழிப்பறை வசதி இல்லாததால், நூலக கட்டிடத்திலேயே தொடர்ந்து வகுப்புகள் நடைபெறுகிறது. எனவே புதிய கட்டிடத்தில் கழிப்பறை வசதி செய்துதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மணிமாறன், தேவதானப்பட்டி.
எரியாத தெருவிளக்குகள்
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அனுமந்தநகர் குளம் அருகே செல்லும் சாலையில் 2 தெருவிளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கிவிடுகிறது. அதை பயன்படுத்தி, சமூக விரோத செயல்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. பொதுமக்களின் அச்சத்தை போக்க தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும். -ராஜா, பாலகிருஷ்ணாபுரம்.
விபத்தை ஏற்படுத்தும் வளைவு
பழனியை அடுத்த மானூரில் ஆற்றுப்பாலம் பகுதியில் ஆபத்தான வளைவு இருக்கிறது. இந்த வளைவில் வாகனங்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்பும் நடக்கிறது. எனவே விபத்தை தடுப்பதற்கு அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். -வடிவேல், மானூர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
திண்டுக்கல் செயின்ட்சேவியர் தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகமாக இருக்கிறது. எனவே கழிவுநீர் சீராக வெளியேறும் வகையில் சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.-குமார், திண்டுக்கல்.