தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் ெபட்டிக்கு வாசகர்கள் அனுப்பிய புகார்கள்.
சாலையில் தேங்கும் மழைநீர்
தலக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட குலாலர் தெருவில் கான்கிரீட் சாலை அமைப்பதாக கூறி பல மாதங்களுக்கு முன்பு சாலையில் இருந்து மண் தோண்டி எடுக்கப்பட்டது. அதன்பின்பு இதுவரை புதிய கான்கிரீட் சாலை அமைக்கப்படவில்லை. தற்போது மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-மூர்த்தி, தலக்குளம்.
குடிநீர் தட்டுப்பாடு
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட இருளப்பபுரம் அருந்ததியர் காலனி பகுதியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் தடைப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக தீர்வாக வாகனம் மூலம் தண்ணீர் வினியோகம் செய்து வருகிறது. அந்த தண்ணீரை பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பிடித்து செல்கிறார்கள். குடிநீர் தட்டுப்பாடுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் பழுதடைந்த மின்மோட்டாரை விரைவில் சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுபா, இருளப்பபுரம்.
வாகன ஓட்டிகள் அவதி
நாகர்கோவில் நேசமணிநகர் பகுதியில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் அருகே சாலையில் பாதாளசாக்கடை திட்டத்தில் கான்கிரீட் சிலாப் மூலம் மூடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூடி சாலையை விட உயரமாக அமைந்துள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக கார் போன்ற வாகனங்கள் ெசல்லும் போது காரின் அடிப்பகுதியில் கான்கிரீட் சிலாப் மோதுவதால் வாகனங்கள் பழுதடைகின்றன. எனவே, அந்த பகுதியில் சாலைைய சீரமைத்து வாகன ஓட்டிகள் பாதிக்காத வகையில் கான்கிரீட் மூடி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிங்சிலி, நேசமணிநகர்.
சாலையோரம் ஆக்கிரமிப்பு
அடைக்காகுழி ஊராட்சிக்குட்பட்ட செங்கவிளை, பீலிக்குளம் வழியாக சூழாலுக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சாலையின் இரண்டு பக்கமும் கட்டுமான பொருட்களை கொட்டி வைத்தும், மரம், செடி, கொடிகள் மூலமாகவும் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரெஜி, அடைக்காகுழி.
சாலையை சீரமைக்க வேண்டும்
நெய்யூர் பேரூராட்சி 7-வது வார்டு பால்தெரு-காட்டுகுளம் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. மழை காலங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஜல்லிகள் அடித்து செல்லப்பட்டு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக வாகனங்களில் ெசல்கிறவர்களும், நடந்து செல்கிறவர்களும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சாலையில் கான்கிரீட் தளம் அமைத்து இரண்டு பக்கமும் மழைநீர் ஓடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தா.ஜெபராஜ், நெய்யூர்.
சீரமைக்க வேண்டிய சாலை
திருவட்டாரில் இருந்து மாத்தூர் செல்லும் சாலையில் தொலைப்பேசி நிலையம் எதிரே சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜகுமார், விளாக்கோடு.