தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 08888 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-08 18:40 GMT

குண்டும் குழியுமான சாலை



திருப்பத்தூர் பெரிய கடைத்தெருவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் போடப்பட்ட புதிய தார் சாலையில் பல இடங்களில் சேதமாகி குண்டும் குழியுமாக உள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகிறார்கள். புதிய தார் சாலையை போட்ட சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து, உடனடியாக சாலையில் உள்ள பள்ளங்களை தார் கலவை போட்டு சீரமைக்க வேண்டும்.

-தேவராஜன், மாடப்பள்ளி.

போக்குவரத்து நெரிசல்




ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை மற்றும் சோளிங்கர் ரோடு ஆகிய பகுதிகளில் காலை 8 மணியில் இருந்து 10 மணிவரையிலும், மாலை 4 மணியில் இருந்து இரவு 9 மணி வரையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. மேலும் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்வதற்காக அதிக சத்தத்துடன் ஒலியை (ஹாரன்) எழுப்புவதால் சாலையில் செல்லும் நோயாளிகள், வயது முதிர்ந்தவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் எனச் சாலையில் செல்பவர்கள் அலறியடித்து ஓடுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. மேற்கண்ட பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணபிரான், அரக்கோணம்.

மின்கம்பம் பழுது




வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகர அரசு மருத்துவமனை அருகில் மின்கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின்கம்பம் பழுதடைந்துள்ளது. உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. பழுதடைந்த கம்பத்தை மாற்றி விட்டு புதிய மின்கம்பத்தை அமைக்க வேண்டும்.

-த.வெங்கடேசன், பேரணாம்பட்டு.

சாலையில் தேங்கும் நீரால் இடையூறு




திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலையில் ஒரு தனியார் ஓட்டல் எதிரே கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புதிதாக போடப்பட்ட தார் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இது, அந்த வழியாக செல்வோருக்கு இடையூறாக உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தண்ணீரில் வேகமாக செல்வதால் அருகில் செல்வோர் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கிறது. தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. தேங்கிய தண்ணீரை வடிய வைக்க வேண்டும், எனப் பலமுறை எடுத்துக்கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. சாலைப் பணியாளர்கள் தண்ணீரை வடிய வைப்பார்களா?

-ஆர்.ஆறுமுகம், கசிநாயக்கன்பட்டி.

பழுதான சாலை



ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி சிறப்பு நிலை பேரூராட்சி ராமபாளையம் சுடுகாட்டுக்கு செல்லும் சாலையை கடந்த 6 மாதத்துக்கு முன்பு தார் சாலையாக போட்டார்கள். அந்தச் சாலை தரமாக இல்லை. பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. டெண்டர் எடுத்து சாலையை போட்டவர்கள் பழுதான இடங்களை சீர் செய்ய வேண்டும்.

-நாகராஜன், திமிரி.

Tags:    

மேலும் செய்திகள்